எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் பம்பரகட்ட தலை... பவ்யமான பின்னணி பைக் வீலிங் சாகசத்தால் ரூ.4000 பழுத்தது..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே கல்லூரி மாணவிகள் முன்பாக இருசக்கரவாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் பைக்கில் வீலிங் சாகசம் செய்த கல்லூரி மாணவருக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார் அவரது தலைமுடியையும் சரியாக வெட்டச்செய்து புத்திமதி சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தலைக்கவசம் அணியாமல் வீலிங் செய்து அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் போலீசிடம் சிக்கி பல்பு வாங்கிய ராகுல் இவர் தான்..!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ராகுல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். அதிக இன்ஸ்டாகிராம் பாலோயர்களை வைத்திருக்கும் ராகுல், தனது காஸ்ட்லி பைக்கில் தலைக்கவசம் இல்லாமல் வீலிங் வித்தை காண்பித்து வீடியோ போடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்
அந்தவகையில் அவர் வெளியிட்ட வீடியோவே ராகுலுக்கு ராகு காலமாக மாறி இருக்கின்றது. அவரது வீடியோவை அடிப்படையாக கொண்டு அவரது இரு சக்கரவாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார் கன்னியாகுமரி எஸ்.பி சுந்தரவதனம். இதையடுத்து நேசமணி நகர் போலீசார் ராகுலின் வித்தைக்கு உதவிய பைக்கை பறிமுதல் செய்து சாலை விதிகளை மீறியதாக ராகுலுக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கல்லூரியில் படிக்கிற பையன் தலைக்கவசம் அணியாமல் சென்றது ஏன் ? என்று கேள்வி எழுப்பிய போலீசாரிடம், தனது ஹேர் ஸ்டைல் வெளியில் தெரிய வேண்டும் என்று பதில் சொன்னதாக கூறப்படுகின்றது. போலீசார் ராகுலுக்கு புரியும் வகையில் புத்திமதி சொன்னதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தலைமுடியை ஒழுக்கமாக வெட்டி பவ்யமாக காவல் நிலையம் வந்து அபராதத்தை செலுத்தி விட்டு தனது இரு சக்கரவாகனத்தை பெற்றுச்சென்றார் ராகுல்..!
இனி வரும் காலங்களில் தலைக்கவசம் அணியாமல் ஒற்றை வீலில் பைக் ஓட்டினால் பைக்கை பறிமுதல் செய்து நிரந்தரமாக வைத்துக் கொள்வோம் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Comments