சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

0 233

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி பக்தர்கள் வெள்ளத்திற்கு நடுவே நடைபெற்றது. திருச்செந்தூரில் கடற்கரையில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஆண்டவனை நோக்கி தவம் இருந்து பெறுவதற்கு அரிய வரம் பெற்ற சூரர்கள், ஆணவத்தால் செய்த அட்டூழியங்களை அடுத்து, அவர்களை வதம் செய்து, அருள் கொடுத்த முருகனின் பெருமை சொல்வதே சூரசம்ஹார விழா. தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் எல்லாம் சூரசம்ஹார விழா விமர்சையாக நடைபெற்றது.

சூரசம்ஹாரம் நடைபெற்றதாக பக்தர்கள் கொண்டாடும் திருச்செந்தூரில், கடற்கரையில் விழா நடைபெற்றது. யானை முகம் கொண்ட தாரகாசூரன், சிங்கமுகாசுரன், ஆகியோரை முருகன் வேல் கொண்டு வதம் செய்யும் நிகழ்வு நடத்தி காட்டப்பட்டது.

தம்பியர்கள் இருவரும் படுகளத்தில் வீழ்ந்த பின்னரும் படை கொண்டு முருகன் எதிர்க்க வந்த சூரபத்மன், சேவலாய், மரமாய் மாறி மாயப்போர் புரிந்தான். அவனை மயிலாக்கி தமது வாகனமாகவும், சேவல் கொடியாகவும் தாங்கி சண்முகர் அருளிய காட்சியும் நடத்தி காட்டப்பட்டது.

திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அசுர வதம் முடிந்த உடன் பக்தர்கள் தங்களின் விரதத்தை முடித்து, வழிபாடு செய்தனர்.

இதே போல முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அறுபடை வீடுகளான பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலையிலும் சூரசம்ஹாரம் விமர்சையாக நடைபெற்றது.

இதே போல சிறுவாபுரி முருகன் கோவில், திருப்போருர் கந்தசாமி கோவில், மருதமலை முருகன் கோவில், சென்னை வடபழனி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments