“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் கையில் அரிவாளுடன் சரண்டைந்த இளைஞரை சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்துச்சென்ற நிலையில், தனது வழக்கறிஞரை கொலை செய்தது ஏன் ?என்று விவரிக்கும் காட்சிகள் தான் இவை..!
கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து இவரது சொத்து தொடர்பான வழக்கை சரல்விளை பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் சோபி என்ற வழக்கறிஞர் நடத்தி வந்தார். கிறிஸ்டோபர் சோபி , எதிர் தரப்பு வழக்கறிஞருடன் சேர்ந்து கொண்டு வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் செயல்பட்டது இசக்கிமுத்துவுக்கு தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இசக்கி முத்துவுக்கும் , அவரது வழக்கறிஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தனது வழக்கு குறித்த ஆவணங்களை தன்னிடம் தறுமாறு கேட்ட நிலையில் கொடுக்க மறுத்ததோடு, இசக்கி முத்துவை , கிறிஸ்டோபர் சோபி கடுமையாக மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது.
வழக்கை தொடர்ந்து நடத்த இயலாமல் இசக்கி முத்து தவித்த நிலையில் புதன்கிழமை இரவு வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி தனக்கு வாழைக்கன்று ஒன்று வேண்டும் ஏற்பாடு செய்யுமாறு இசக்கிமுத்துவிடம் கேட்டு உள்ளார். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட இசக்கிமுத்து தருவதாக கூறி அவரை பீமநகரில் உள்ள மண் பரிசோதனை கூடம் அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத குளத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.
வாழைக்கன்று வாங்கும் ஆர்வத்தில் சென்ற வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபியிடம் அன்பாக பேசுவது போல நடித்து அவருக்கு மது ஊற்றி கொடுத்து உள்ளார் இசக்கி முத்து. போதை தலைக்கேறிய நிலையில் வழக்கறிஞர் சோபியிடம் , தன்னுடைய வழக்கு விவரங்கள் அடங்கிய கேஸ் கட்டை தரமறுப்பது ஏன் ? என்று கேட்டு இசக்கி முத்து சண்டையிட்டுள்ளார்.
தான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த அரிவாளை எடுத்து சோபியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு , கேனில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். பின்னர் கையில் அரிவாளுடன் ஆரல்வாய்மொழி காவல் நிலையம் சென்று தான் செய்த கொலை குறித்து போலீசாரிடம் தெரிவித்து சரண் அடைந்துள்ளார். முதலில் போலீசார் இசக்கி முத்து சொன்னதை நம்பவில்லை என்று கூறப்படுகின்றது. பின்னர் அவர் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்த போது வழக்கறிஞர் கருகிய நிலையில் சடலமாக கிடந்ததால் பதறியடித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு, வழக்கறிஞர் சோபி, எதிர்கட்சி வழக்கறிஞருடன் சேர்ந்து தனது சொத்து வழக்கை இழுத்தடித்ததாலும் கேஸ் கட்டை தர மறுத்து குடும்பத்தை அழித்து விடுவதாக மிரட்டியதாலும், அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இசக்கி முத்து வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments