மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..

0 1267

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி புதன்கிழமை காலை வரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பல கட்சி வேட்பாளர்கள் போட்டியில் இருந்தாலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

மொத்தமுள்ள 50 மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், இந்திய வம்சாவளியினருமான கமலா ஹாரிஸ் எலக்டோரல் வாக்குகள் எண்ணிக்கையிலும், வாக்கு சதவீதத்தின் அடிப்படையிலும் தொடர்ந்து பின் தங்கிய நிலையிலேயே இருந்தார்.

மொத்தமுள்ள 538 தேர்வுக்குழு உறுப்பினர்களின் வாக்குகளில் டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மைக்கு தேவையான 270-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றினார். 40 எலக்டோரல் வாக்குகளை கொண்ட டெக்சாஸ், 30 வாக்குகளைக் கொண்ட புளோரிடா, 19 வாக்குகளைக் கொண்ட பென்னிசில்வேனியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மாகாணங்கள் டிரம்ப் வசம் சென்றன.

54 வாக்குகளை கொண்ட கலிபோர்னியாவில் கமலா ஹாரிஸ் வென்றபோதிலும், மின்னசோட்டா, நியூ மெக்சிகோ, நியூ ஹாம்ப்ஷையர், வெர்மோண்ட் போன்ற குறைந்த வாக்குகள் கொண்ட மாகாணங்களுடன் மொத்தம் 19 மாகாணங்களையே அவரால் கைப்பற்ற முடிந்தது.

இதன் மூலம் அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார். புளோரிடாவில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பாதுகாப்பான மற்றும் வளமான அமெரிக்காவை உருவாக்கும் வரை தாம் ஓயப்போவதில்லை என கூறினார். மேலும், தமக்கு உறுதுணையாக இருந்த தமது மனைவி, தனது குடும்பத்தினர், தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

டிரம்ப் அதிபராகும் நிலையில் துணை அதிபராக ஜே.டி. வேன்ஸ் பொறுப்பேற்பார். அவரது மனைவி உஷா சிலிகுரி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். உஷாவின் தந்தை ஆந்திராவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபராக இருந்து தேர்தலில் தோற்று மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற 2வது நபர் என்ற பெருமையையும் டிரம்ப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 130 ஆண்டுகளுக்கு முன் 1885ஆம் ஆண்டில் அதிபராக இருந்த குரோவர் கிளீவ்லேண்ட், 1889 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்து பின் 1893 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று அதிபரானார்.

இதனிடையே, டிசம்பர் 11ஆம் தேதியன்று ஒவ்வொரு மாகாணத்தின் எலக்டர்ஸ், அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்வு செய்வதற்காக வாக்களிப்பர். அதனைத் தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதியன்று அமெரிக்க காங்கிரஸ் முன்பு வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவர். ஜனவரி 20 ஆம் தேதியன்று புதிய அதிபர் மற்றும் துணை அதிபர் பொறுப்பேற்றுக்கொள்வர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments