தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..
எங்கும் தேனீக்கள் மொய்த்தபடி தென்படும் இந்த இடம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள விவசாய தோட்டம் ஆகும். விவசாயத்துடன் கூடுதல் வருவாய் ஈட்டவேண்டும் என்று யோசித்த இளைஞர் விஜயகுமார், மதுரை வேளாண் பல்கலைகழகத்தில் தேனி வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தேனீ வளர்ப்பிற்கான பெட்டிகள் மற்றும் ராணி தேனீயுடன் வளர்ப்பு தேனீக்களை வேளாண்துறையினரே வழங்கி இனப்பெருக்கத்திற்கான வழிமுறைகளை கற்றுத்தருவதாக விஜயகுமார் தெரிவித்துள்ளார். தேனீ வளர்ப்பிற்கு முக்கியமாக 2 கிலோமீட்டர் சுற்றளவில் தேனீக்களுக்கு தேவையான மதுரம் மற்றும் மகரந்தம் தரும் செடி, கொடிகள் இருக்க வேண்டும். கூட்டின் வெப்ப நிலை, தேனின் கெட்டித்தன்மையை குறைக்க, தேனீக்களுக்கு தூய்மையான நீர் அவசியம் என்பதால் அருகில், கிணறு, ஓடை, வாய்க்கால் என எதாவது ஒரு நீர் நிலை இருக்க வேண்டும் என்கிறார் விஜயகுமார்.
தேனீக்களை வளர்த்து மாதம் தோறும் 70 முதல் 80 லிட்டர் வரையிலான தேன் சேகரித்து 50 ஆயிரம் ரூபாய் வரை லாபம் ஈட்டுவதாகவும் விஜயகுமார் தெரிவித்துள்ளார். தேனீ வளர்ப்புக்காக தமிழக அரசு,வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலம் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்துவதாக தெரிவித்துள்ள விஜயகுமார், தேனீ வளர்ப்பாளர்களுக்கு அரசு 40 சதவீதம் வரை மானியம் அளிப்பதாகவும் கூறியுள்ளார். குறைந்த நேரம் செலவிட்டாலே அதிக வருவாயும் ஈட்ட முடியும் என்பதால் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் தேனி வளர்ப்பில் ஆர்வம் காட்டவேண்டும் என்று அவர் தெரிவித்தார்
Comments