50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

0 998

சென்னை அடுத்த மீஞ்சூர் ரெயில் நிலையத்திற்கு, நெல்லூரில் இருந்து சென்னை வந்த லோக்கல் ரெயிலில் கையில் டிராலி சூட் கேசுடன் ஒரு ஆணும் பெண்ணும் இறங்கினர்.

சிறிது நேரம் அங்குள்ள பிளாட்பாரத்தில் சுற்றிய அவர்கள் , கையோடு கொண்டு வந்த டிராலியை விட்டு விட்டு செல்ல இதனை பார்த்த சிலர் அவர்களிடம் ஏன் பேக்கை விட்டு செல்கிறீர்கள் ? என்று கேட்டபோது அதற்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து இருவரும் நகர்ந்து சென்றுள்ளனர்.

உடனடியாக அருகில் இருந்த ஆர்பிஎப் போலீஸ்காரர் மகேஷ் என்பவரிடம் இந்த விவரத்தை பயணிகள் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து அவர் அந்த இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்துள்ளார்.

கூடுதல் போலீசாரை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் அந்த ட்ராலி சூட் கேஸை திறக்க செய்துள்ளனர். உள்ளே துணியால் மூடப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .

அந்த இருவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

சேலத்தை பூர்வீகமாக கொண்ட பொற்கொல்லரான பாலசுப்ரமணியம் கடந்த சில ஆண்டுகளாக நெல்லூர் மாவட்டம் ராஜேந்திரா நகர் குக்கல குண்டா பகுதியில் தங்கி பர்னிச்சர் கடையில் பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இவரது வீட்டிற்கு அருகில் 65 வயது உள்ள மன்னம் ரமணி என்ற மூதாட்டி வசித்து வந்திருக்கிறார். அவர் எப்பொழுதும் தங்க நகைகள் அணிந்திருக்கும் பழக்கம் உடையவர் என்பதால் அவரிடம் இருந்து நகைகளை கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் சம்பவத்தன்று அந்த மூதாட்டியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற பாலசுப்ரமணியம் போர்வையால் அவரை மூடி அடித்து கொலை செய்து அவரது கழுத்தில் இருந்த நகை மற்றும் காதுகளில் இருந்த நகைகளை பறித்திருக்கிறார்.

சுமார் 50 கிராம் எடையுள்ள அந்த நகைகளை உருக்கி வீட்டிலேயே மறைத்து வைத்துவிட்டு மூதாட்டியின் சடலத்தை ட்ராலி சூட் கேசில் அடைத்து அதன் மீது துணியை வைத்து மூடிஉள்ளார்.

பின்னர் அந்த ட்ராலி சூட்கேஸ் உடன் தனது 17வயது மகளை அழைத்துக் கொண்டு நெல்லூர் ரயில் நிலையம் சென்றுள்ளார்.

அங்கிருந்து சென்னைக்கு புறப்படும் லோக்கல் ரயிலில் தனது மகளுடன் ஏறி பயணித்த பாலசுப்ரமணியம் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கி இருக்கிறார். அங்குள்ள பிளாட்பாரத்தில் யாருக்கும் தெரியாமல் இந்த டிராலியை விட்டு செல்லலாம் என்று நினைத்தபோது கையும் களவுமாக சிக்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மூதாட்டி தனது மகளை தவறான வழிக்கு அழைத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாக முதலில் காவல் துறையினரிடம் பாலசுப்ரமணியம் தெரிவித்து இருந்தார் .

போலீசாரின் தொடர் விசாரணையில் பாலசுப்ரமணியம் முதலில் தெரிவித்தது பொய் என்றும் அவர் நகைக்காகவே மூதாட்டியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று அடித்துக் கொன்றது உறுதியானதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து மூதாட்டி கொலை வழக்கில் தந்தை பாலசுப்ரமணியம் 17 வயது மகளை கைது செய்த போலீசார் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பாலசுப்ரமணியம் மனைவி சத்தியவதியை தேடி நெல்லூர் விரைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments