கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!

0 965

அதிமுக பிரமுகரை கொலை செய்துவிட்டு , தனது வீட்டிற்கு குடிநீர் வரவில்லை என்று கலெக்டர் ஆபீசுக்கு புகார் கொடுக்கச்சென்று போலீசில் சிக்கிய குண்டு மணி இவர் தான்..!

சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். அதிமுக கிளை செயலாளரான இவர் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி அளவில் தனது பெட்டிக்கடையை திறக்க சென்ற போது அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர் அவரை வெட்டி கொலை செய்தார். இதனை கண்டித்து அதிமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்த நிலையில் கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியது, அதே ஊரை சேர்ந்த (ஒல்லியான தேகம் உடைய) குண்டுமணி என்ற 25 வயது இளைஞர் என்பது தெரியவந்தது.

அவரை திருப்பாச்சேத்தி போலீசார் தேடிய நிலையில் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியுடன் சமூக ஆர்வலர் போர்வையில் குண்டுமணி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் குண்டுமணியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

செவ்வாய்கிழமை இரவு, மதுரையில் தன்னை பிரிந்து வாழ்ந்துவரும் தனது மனைவி பவித்ராவையும், மாமியார் கருப்பாயியையும் அரிவாளால் வெட்டிய குண்டுமணி, அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிவந்து அதிகாலையில் அதிமுக கிளை செயலாளர் கணேசன் கண்ணில் பட்டதால் போகிற போக்கில் அவரையும் அரிவாளால் வெட்டியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

அந்த ஊரில் முக்கிய பிரமுகராக உள்ள கணேசன் கட்டிவந்த விநாயகர் கோவிலில் இருந்து விநாயகரை தூக்கிச்சென்று அருகில் உள்ள கிணற்றில் வீசிய விவகாரத்தில் குண்டுமணியை கணேசனும், பாலு என்பவரும் கண்டித்ததாக கூறப்படுகின்றது.

அதே போல தனது குடும்ப பிரச்சனையை தீர்த்து வைக்க கணேசன் உதவாததாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாக குண்டுமணி வாக்கு மூலம் அளித்தான்.

கொலை செய்து விட்டு ஏன் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றாய் ? எனக்கேட்டதற்கு, எங்க வீட்டு குடி நீர் குழாயில் ரெண்டு நாளா தண்ணீர் வரல, அதான் கலெக்டர நேர்ல பார்த்து மனு கொடுக்கலாமுன்னு வந்தேன்னு சொல்லி போலீசாரை அதிரவைத்தான் குண்டுமணி..!

 

குண்டுமணி யை கைது செய்த போலீசார் அவன் மறைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து அரிவாளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments