லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!
ராமேஸ்வரம் தீவை தமிழத்துடன் இணைக்கும் விதமாக 1914-ம் ஆண்டு கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்துக்கு மாற்றாக 550 கோடி ரூபாய் மதிப்பில் புதிய செங்குத்து தூக்குப் பாலம் கட்டப்பட்டது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு கர்டர்களுடன்37 மீட்டர் உயரம், 77 மீட்டர் நீளத்தில் இந்த செங்குத்து ரயில் தூக்குப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய ரயில் பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலம் விமானத் தொழில் நுட்பத்திற்கு பயன்படக்கூடிய அலுமினிய உலோகக் கலவையால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 700 டன் ஆகும். செங்குத்து தூக்கு பாலத்தின் இருபுறமும் உள்ள தூண்களின் மேல் ஹைட்ராலிக் லிப்ட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கணினி மூலம் பாலத்தை மூன்று 3 நிமிடத்திற்குள் மேலே தூக்கவும், இரண்டு நிமிடத்திற்குள் இறக்கி கொள்ளவும் முடியும்.
தூண்களில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வட கம்பிகள் ராட்சத சக்கரத்தில் பொருத்தப்பட்டு இயந்திரத்தின் உதவியுடன் முன்நோக்கி சுற்றும் போது பாலம் மேலே நோக்கி எழும்புகிறது. பின்னர் அந்த சக்கரம் பின்னோக்கி சுற்றும் போது பாலம் கீழே இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த செங்குத்து தூக்கு பாலத்திற்கு அருகில் இரண்டு மாடி கட்டிடத்தில் ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை கட்டப்பட்டுள்ளது. இந்த செயல்பாடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு பொறியாளர்கள் இயக்குகின்றனர். பாலத்தில் சோதனை ஓட்டம் நிறைவு பெற்ற நிலையில், ரயில்வே பாதுகாப்பு முதன்மை அதிகாரியின் ஒப்புதலுக்குப் பிறகு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments