கௌரவ கொலை செய்யப்பட்ட மகன்... போதையால் பாதை மாறியவர் திருட்டால் ஏற்பட்ட அவமானம்...
போதைக்கு அடிமையாகி, திருட்டில் ஈடுபட்டு வந்த மகனை கண்டித்தும் கேட்காததால் உறவினர்களோடு சேர்ந்து தந்தையே கழுத்தை நெரித்து கொன்று விட்டு சடலத்தை தீ வைத்து எரித்ததன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி விசாரணையை துவங்கினர் எட்டையபுரம் போலீஸார்.
தடயவியல் நிபுணர் மூலமாக சடலத்தின் கைரேகையை பதிவு செய்து CCTNS போர்ட்டலில் ஏற்கனவே உள்ள பதிவுகளோடு ஒப்பிட்டதில், இறந்தவர் கிளவிப்பட்டியைச் சேர்ந்த மகேஷ் என்பவரின் 22 வயது மகன் செல்வகுமார் என்பதும், அவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளதும் தெரிய வந்தது.
செல்வகுமார் காணாமல் போனதாக எந்த புகாரும் இல்லாததால் அவரது கிராமத்திற்கு சென்று ரகசிய விசாரணை நடத்தினர் போலீஸார். அதில், மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான செல்வகுமார், அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி அக்கம் பக்கத்தினருக்கும் பெரும் தொல்லையாக இருந்து வந்தது தெரிய வந்தது.
செல்வகுமாரை அவரது குடும்பத்தினர் பலமுறை கண்டித்தும் போதைப்பழக்கத்தையோ, திருட்டையோ கைவிடவில்லை என கூறப்படுகிறது. எனவே, மதுரையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பதற்காக செல்வகுமாரை கடந்த 29-ஆம் தேதி காரில் அழைத்து சென்றுள்ளார் அவரது தந்தை மகேஷ். காரில் செல்வகுமாரின் சகோதரர்கள் அரவிந்த், சுஜன் மற்றும் உறவினர் பாலகிருஷ்ணனும் சென்றனர்.
போதையில் இருந்த செல்வகுமார் தன்னை விட்டுவிடுமாறும், அப்படி இல்லையென்றால் அனைவரையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மகேஷ் மற்றும் உடனிருந்தவர்கள் காரில் வைத்தே துண்டால் செல்வகுமார் கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் கேனில் பெட்ரோல் வாங்கி வந்து சடலத்தை எரித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து, மகேஷிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசி அவரது குடும்பத்தினர் சமாளிக்க முயற்சித்து கொண்டிருந்தனர். பெட்ரோல் வாங்கிச் செல்லும் சி.சி.டி.வி ஆதாரத்தை போலீஸார் காண்பித்ததும் மகனை கொன்று சடலத்தை எரித்ததை ஒப்புக் கொண்டார் மகேஷ்.
மகன் செல்வகுமாரால் நாள்தோறும் பல்வேறு தொல்லைக்கு ஆளாகி வந்ததாகவும், அதற்கு காரணமான போதை பழக்கத்தை கைவிட எவ்வளவோ எடுத்துக் கூறியும் மறுத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக அவரது தந்தை மகேஷ் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, செல்வகுமாரின் தந்தை மகேஷ் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர் போலீஸார்.
போதையால் பாதை மாறும் ஒருவரால் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்றே எனத் தெரிவித்தனர் போலீஸார்.
Comments