உண்மையிலேயே தில்லு தாம்பா.. நீட்டில் எடுத்தது 129.. கொடுத்தது 698 போலி ஆவணத்தால் சிக்கிய மாணவர்..! “மருத்துவர் ஆக வேறு வழி தெரியல சார்..”

0 187

நீட் தேர்வில் 129 மதிப்பெண் எடுத்து விட்டு 698 மதிப்பெண் எடுத்ததாக, அடையாறு ஸ்டூடன்ஸ் ஜெராக்ஸ் கடையில் போலி சான்றிதழை தயாரித்து சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற மாணவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மேடவாக்கம் ரவி தெரு ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் லக்சை. இவர் கடந்த 29 ஆம் தேதி தனது பெற்றோருடன் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு சென்றார். தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 698 மதிப்பெண் எடுத்துள்ளதாகவும், தனக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான அனுமதி இருப்பதாகவும் கூறி அங்குள்ள அதிகாரிகளிடம் சான்றிதழை கொடுத்துள்ளார். மாணவர் லக்சை கொடுத்த சான்றிதழ்களை சரி பார்த்த போது அதில் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அது குறித்து மாணவர் லக்சையிடம் தெரியாதது போல காட்டிக் கொண்டு, "நீங்கள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு செல்லுங்கள், உடனே கிடைத்து விடும்" என்று அனுப்பி வைத்தனர். உடனடியாக சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவ அதிகாரிகள், கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணை மருத்துவ கல்வி இயக்குனர் கராமத்திடம் , மாணவர் சான்றிதழ் குறித்து தெரிவித்து விட்டனர்.

இதனை அறியாமல் லக்சை நேரிடையாக கீழ்ப்பாக்கத்திற்கு தனது பெற்றோரையும் அழைத்து சென்று துணை மருத்துவ கல்வி இயக்குனர் கராமத்தை சந்தித்தார். அவர் நீட் சான்றிதழ், கல்லூரிக்கான அனுமதி சான்றிதழ்களை ஆய்வு செய்து விட்டு அவை போலியானவை என்பதை உறுதிபடுத்தினார். அவரது புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர் லக்சை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கடந்த 2023-ம் ஆண்டு நீட் தேர்வில் 127 மதிப்பெண்கள் பெற்றதாகவும், அதன் பின்பு கடந்த 2024-ம் ஆண்டு 2 வது முயற்சியில் நீட் தேர்வில் 129 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதாகவும், தன்னால் பெரிய அளவில் பணம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்க முடியாது என்பதால் அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்காக 129 மதிப்பெண் எடுத்த சான்றிதழை மாற்றி 698 மதிப்பெண் எடுத்து போலவும்,
சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை காண அனுமதி சீட்டையும் அரசு லோகோவுடன் போலியாக தயாரித்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த போலி சான்றிதழை தயாரித்து கொடுத்தது திருவான்மியூரில் உள்ள அடையார் ஸ்டூடன்ட் ஜெராக்ஸ் கடையின் ஊழியர் என்பதும் தெரிய வந்தது. பாலவாக்கத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி ஊழியர் பாத்திமா என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் 2 பேரும் தலைமறைவாகி விட்டதால் மாணவரை கைது செய்த போலீசார் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது போல வேறு யாருக்கேனும் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளனரா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments