த.வெ.க மாநாட்டிற்கு வந்து மாயமாகி தவித்த மாணவர் .. மீட்டு வீட்டுக்கு அனுப்பிய விவசாயி ..! ஆரத்தி எடுத்து தாய் ஆனந்த கண்ணீர்

0 247

விக்கிரவாண்டி குலுங்க நடந்தேறிய விஜய்யின் த.வெ.க மாநாட்டிற்கு கிருஷ்ணகிரியில் இருந்து நண்பர்களுடன் வந்து மாயமானவர் மீண்டும் வீடு திரும்பிய நிலையில் கண்ணீர் மல்க தாய் வரவேற்ற காட்சிகள் தான் இவை..!

கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான மகேஸ்வரன் என்பவர் த.வெ.க வினர் ஏற்பாடு செய்திருந்த வேனில் ஏறி விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டிற்கு வந்தார். கூட்டத்தில் மாயமான மகேஸ்வரன் மீண்டும் வேனை சென்றடைய இயலவில்லை. இவரை தேடிப்பார்த்தவர்கள் மகேஸ்வரன் மாயமானதாக நினைத்து சோகத்துடன் ஊர் திரும்பினர். கூட்டத்தில் வழிதவறி திருவண்ணாமலைக்கு நடந்தே சென்ற மகேஸ்வரன், அந்தவழியாக சேலம் சென்ற லாரி ஓட்டினரின் கருணையால் சேலம் வந்து சேர்ந்தார். அவரிடம் இருந்த செல்போனில் சார்ஜ் இல்லாததால் யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

அங்கிருந்து கிருஷ்ணகிரிக்கு செல்ல செலவுக்கு பணமில்லாமல் தவித்த மகேஸ்வரன் நடந்தே கிருஷ்ணகிரி செல்லத் தொடங்கினார். இதனை அந்த வழியாக சென்ற விவசாயி ஒருவர் பார்த்து அவரிடம் விவரம் கேட்டுள்ளார். 2 நாட்களாக குளிக்காமல் சாப்பிடாமல் காணப்பட்ட மகேஸ்வரனை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று குளிக்க வைத்து உடுக்க புதிய உடைகள் கொடுத்து, சாப்பாடும் கொடுத்துள்ளார். பின்னர் விவசாயி வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் போட்ட பின்னர் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த விவரத்தை கூறி உள்ளார் மகேஸ்வரன். அதனை தொடர்ந்து கைசெலவுக்கு பணம் கொடுத்து மகேஸ்வரனை கிருஷ்ணகிரிக்கு பேருந்தில் ஏற்றி பத்திரமாக வழி அனுப்பி வைத்துள்ளார் விவசாயி.

இரு தினங்களாக தனது மகனை காணாமல் தவித்த தாய், பத்திரமாக வீட்டிற்கு வந்து சேர்ந்த மகேஸ்வரனை கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றார்.

மகேஸ்வரனை ஆரத்தி எடுத்து வரவேற்று அரவணைத்துக் கொண்டனர்.

செல்போனில் சார்ஜ் இல்லாத நிலையில் பிறரிடம் செல்போன் வாங்கி பேசலாம் என்றால், பெற்றோர் உள்ளிட்ட எந்த ஒரு உறவினர்களின் செல்போன் எண்ணையும் மகேஸ்வரன் நினைவில் வைத்திருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள, குறைந்த பட்சம் 4 செல்போன் எண்களையாவது நினைவில் வைத்துக் கொள்ள, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவது அவசியம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments