15 வயது சிறுமி கொலை..டிராவல் பேக்கில் சடலம் ராஜஸ்தான் தம்பதி கைது..! போலீசில் சிக்கியது எப்படி ?

0 1601

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பி.ஆர்.எம். திருமண மண்டபம் அருகே பாலத்துக்கு அடியில் கடந்த மாதம் 30ஆம் தேதி டிராலி பேக் ஒன்று கிடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த சங்ககிரி போலீசார் அந்த டிராலி பேக்கை கைப்பற்றி திறந்து பார்த்தபோது உள்ளே கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சடலம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர். சடலமான பெண் ஒல்லியாக காணப்பட்டதால் வட மாநில பெண்ணாக இருக்கலாம் என்று கருதிய போலீசார் கடந்த ஒரு மாதமாக சேலம், நாமக்கல் , ஈரோடு, திருப்பூர் ,கோவை மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களில் தங்கி படிக்கின்ற வெளிமாநில பெண்கள் யாரும் மாயமானார்களா? என விசாரித்தனர் .

யாரும் மாயமாகவில்லை என தெரியவந்ததையடுத்து 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்துக்கு இடமாக சம்பவ இடத்தில் நின்ற கர்நாடக பதிவெண் கொண்ட காரின் உரிமையாளரான அபினேஸ் சாகுவை பிடித்து விசாரித்தபோது டிராவல் பேக் கொலைக்கான மர்மம் விலகியது.

பெங்களூர் அருகே உள்ள பன்னந்தூர் பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட அபினேஸ் சாகு - அஸ்வினி பட்டில் தம்பதியர் , ஜோத்பூரைச் சேர்ந்த தங்கள் உறவுக்கார பெண்ணான சுமைனா என்பவரை தங்கள் வீட்டில் வளர்த்துள்ளனர். சுமைனா வீட்டு வேலைகளையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அஸ்வினி பட்டில், சிறுமி சுமைனாவை திட்டிய போது , இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. வயதில் சிறியவள் தன்னை எதிர்த்து பேசியதால் ஆத்திரம் அடைந்த அஸ்வினி, அருகில் கிடந்த கட்டையை எடுத்து சுமைனாவின் தலையில் தாக்கி உள்ளார். இதில் சுருண்டு கீழே விழுந்த சுமைனா எதிர்பாராத விதமாக இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் தனது கணவருடன் சேர்ந்து கொலையை மறைக்க சடலத்தை டிராலி பேக்கில் அடைத்துள்ளார். பின்னர் வெளியூர் செல்வது போல டிராலி பேக்கை காரில் கொண்டு வந்து சங்ககிரி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தூக்கி வீசிவிட்டு தப்பியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்

கொலை வழக்கில் அஸ்வினி பட்டில் , கணவர் அபினேஸ் சாகு ஆகிய இருவரையும் கைது செய்து சங்ககிரி அழைத்து வந்தனர். கணவனும் மனைவியும் காரில் வந்து டிராலி பேக்கை பாலத்துக்கு அடியில் வீசியபோது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் அவர்களது கார் பதிவானதாகவும், பல சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்து காரின் பதிவெண்ணை அடையாளம் கண்டு இந்த வழக்கில் துப்பு துலக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments