விஜயின் வி-சாலை மாநாடு... விவேகமும், வியூகமும் வெற்றிக்கு வழிவகுக்குமா...

0 1704

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி-சாலையில் நாளை நடக்கிறது. வெற்றிக் கொள்கை திருவிழா என பெயரிட்டுள்ள தவெகவின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கையை அறிவிக்க உள்ளார். 

தவெக மாநாட்டு திடலின் முகப்பு கோட்டை மதில் சுவர்கள் போன்று அலங்கரிப்பக்கட்டு இந்திய விடுதலைக்காக தமிழக மண்ணில் களமாடிய வீரபாண்டிய கட்டபொம்மன், அழகு முத்துகோன், பூலித் தேவன், தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள், ஒண்டி வீரன், சுந்தரலிங்கனார் மற்றும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மன்னர்கள் ராஜராஜசோழன், பெரும்பிடுகு முத்தரையர், உள்ளிட்டோரின் உருவபடங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பிரமாண்ட மேடையின் வலது புறம் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர் மற்றும் விடுதலை போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் ஆகியோரின் 60 அடி உயர பதாகையுடன் விஜய்க்கும் பதாகை வைக்கப்பட்டுள்ளது. மேடையின் இடதுபுறம் சேர, சோழ, பாண்டியன் ஆகிய மூவேந்தர்கள், தமிழன்னை மற்றும் விஜய் நிற்பது போல 60 அடி உயர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டு திடலின் முகப்பில் 100 அடி உயரத்திற்கு தவெக கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. 6 மணியளவில் மாநாட்டு மேடைக்கு வரும் விஜய், திடலின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 250 மீட்டர் நீள ரேம்ப்வாக்கில் நடந்து வந்து, ரிமோட் பட்டன் மூலம் 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றுகிறார் என கூறப்படுகிறது.

மாநாட்டிற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், மாநாட்டு திடலில் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

பகுதிப் பகுதியாகப் பிரித்து வழி ஏற்படுத்தப்பட்டு ஒரு பகுதிக்கு ஆயிரம் பேரிலிருந்து ஆயிரத்து 500 பேர் வரை அமரவும், இது போன்று ஒரு வரிசையில் 8 பகுதிகள் என 6 வரிசையில் 48 பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2 மணியளவில் கட்சியினர் வரத் தொடங்குவார்கள் எனவும் 5 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணிக்குள் மாநாட்டு நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இறுதியாக பேசவுள்ள விஜய் தனது கட்சியின் கொள்கையை அறிவிக்கவுள்ளார் எனவும், கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள குறியீடுகள் குறித்த தகவல், மாநாட்டு பதாகைகளில் இடம்பெற்றுள்ள தலைவர்கள், வீரர்கள் குறித்தும் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மொத்தம் 45 நிமிடங்கள் உரையாற்றும் விஜய், தொண்டர்கள் திடலில் இருந்து வெளியேறுவதற்கு முன்பே கூட்டம் கூடாமல் இருக்க அங்கிருந்து புறப்பட்டுவிடுவார் எனவும் கூறப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட அளவை விட கூட்டம் கூடினால் தலா 50 ஏக்கரில் 4 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பார்க்கிங்கில் இருந்தே வருபவர்களை நிறுத்தி பார்க்க எல்.ஈ.டி திரை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மாநாட்டு திடல், பார்க்கிங் பகுதி என மொத்தம் 75 எல்.ஈ.டி திரைகளும், 600 கழிவறைகள் வைக்கப்பட உள்ளதாகவும், ஆயிரம் லிட்டர், 500 லிட்டர் கொள்ளளவு கொண்டு 500 தண்ணீர் டேங்குகள் வைக்கப்பட உள்ளதாகவும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று கிலோ மீட்டர் சுற்றளவு வரை தண்ணீர் டேங்குகளை வைக்க உள்ளதாகவும், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மாநாட்டிற்கு வருபவர்களுக்கு குளுக்கோஸ் வழங்கப்படவுள்ளது. பொதுமக்களுக்கு டவர் கிடைக்கும் வகையில் ஒரு மொபைல் டவர் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த மாவட்ட பொறுப்பாளர்களால் டிராவல்ஸ் பேருந்துகளில் அழைத்து வரப்படும் கட்சியினருக்கு வரும் வழியிலேயே பார்சல் உணவு வழங்கிய பின்னரே மாநாட்டு திடலுக்கு அழைத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குடிநீர் உணவு பாதுகாப்பு துறை மூலம் பரிசோதிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளதகாவும், கழிவறைக்கு தேவையான தண்ணீரை நிரப்ப 20-க்கும் மேற்பட்ட லாரிகள் தயார் நிலையில் வைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மேற்கொள்கிறது. மேலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர்.

மாநாடு நடக்கும் வி.சாலை சென்னை - திருச்சி நெடுங்சாலையில் இருப்பதால் நாளை பிற்பகல் தொடங்கி  திண்டிவனம் முதல் விக்கிரவாண்டி சுங்கச் சாவடி வரை கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments