காலை பத்தரை மணிக்கு வாயுக் கசிவால் மயக்கம்.. மாலை வரை மவுனம் ஏன் ?.. பள்ளிக்கு எதிராக போர்க்குரல்
சென்னை திருவொற்றியூரில் உள்ள விக்டரி என்ற தனியார் பள்ளியின் 3 வது தளத்தில் படித்துக் கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்த சம்பவத்தையடுத்து பெற்றோர் பள்ளியில் குவிந்தனர். தொழிற்சாலைகளில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டதா ? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்
சென்னை திருவொற்றியூர் கிராமதெரு பகுதியில் விக்டரி என்கின்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது, இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதலே பள்ளியின் மூன்றாவது தளத்தில் படித்து கொண்டிருந்த மாணவிகள் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
சில மாணவிகள் மயங்கி விழுந்ததாகவும், சிலருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அடுத்தடுத்து மாணவிகள் பாதிப்புக்குள்ளனதால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் அங்கு மயங்கி விழுந்த மாணவிகளை தோளில் தூக்கிப்போட்டு மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
35க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தாமதமாக தகவல் கிடைக்கப்பெற்ற பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல ஒன்றுகூடினர். இதனால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை பள்ளி நிர்வாகத்தினர் தெரியப்படுத்தாத நிலையில், தகவல் அறிந்து வந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்
அங்கு வந்த எம்.எல்.ஏ சங்கர் சமாதானம் செய்ய முயன்றும், பெற்றோரின் ஆதங்கம் அடங்கவில்லை
கெமிக்கல் தொடர்பாக ஆய்வு செய்யும் தடயவியல் நிபுணர்கள், சுகாதார துறை அதிகாரிகள், விஷவாயுவை கண்டறியும் தேசிய பேரிடர் குழுவினர் நேரில் வருகை தந்து பள்ளி வளாகத்தின் 3 வது தளத்தில் மட்டும் மர்மமான முறையில் வாயு கசிவு ஏற்பட காரணம் என்ன என்று ஆய்வு செய்தனர்.
காரணத்தை கண்டறிய முடியவில்லை எனவும், ஆய்வகம் கழிவறை , ஏசி என அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்ததில் விஷவாயு வெளியேறுவதற்கான காரணங்கள் ஏதுமில்லை எனவும் தெரிவித்தனர். சுற்றுவட்டார பகுதியில் இருக்க கூடிய தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறியதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்
கடந்த மூன்று நாட்களாக இந்த பிரச்சனை இருப்பதாக மாணவிகள் தெரிவித்த நிலையில், ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் அலட்சியப்படுத்தியதாகவும், மாணவிகளை நடிப்பதாக கூறி சத்தம் போட்டதாகவும் பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதையடுத்து விக்டரி பள்ளிக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments