கல்லூரி வளாகத்துக்குள் தேங்கியுள்ள மழைநீர்.. அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன..?

0 1522

சென்னை பூந்தமல்லியை அடுத்த தண்டலம் பகுதியில், கிருஷ்ணா கால்வாய்க்குச் செல்லும் நீர்வழிப்பாதை திடீரென அடைக்கப்பட்டிருப்பதால், விஜயசாந்தி குடியிருப்பு வளாகம், VGP தொழில்துறை வளாகம், தண்டலம் சவிதா மருத்துவக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் மழை நீர் தேங்கி நிற்பதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிருஷ்ணா கால்வாய் திட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிருஷ்ணா கால்வாயில் கழிவு நீர் கலப்பதாக, நாளிதழ் செய்தியின் அடிப்படையில், மழைநீர் வடிகால் நீர்வழிப்பாதையை அடைத்ததாக கூறினர்.

மேலும், சவிதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் இருப்பதாகவும், நீர் இறைக்கும் மோட்டார்களை பயன்படுத்தி மழைநீர் வெளியேற்ற ஆட்சேபனை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய, சவீதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர், கடந்த 30 ஆண்டுகளாக இந்த மழைநீர் வடிகால் நீர்வழிப்பாதை உள்ளதாக கூறினர். செட்டிப்பேடு கிராம பகுதியிலும், விஜயசாந்தி குடியிருப்பு வளாகத்தில் போதிய கழிவுநீர் கட்டமைப்பு இல்லையென்றும், அவர்கள் தெரிவித்தனர்.

சவீதா மருத்துவக்கல்லூரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நல்ல நிலையில் செயல்படுவதாகவும், தங்கள் வளாகத்திற்குள் ஆய்விற்கு வராமலேயே, நீர்வழித்தடத்தை அடைத்துள்ளதாகவும், சவீதா கல்வி குழும நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், மழைநீர் வடிகாலை கிருஷ்ணா கால்வாயுடன் இணைக்க சவீதா கல்வி குழுமத்தினர் கடிதம் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், கடந்த வாரமே கடிதம் கொடுத்துவிட்டதாகவும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என சவீதா மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments