அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்
திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பில் அழுகிய முட்டைகளை பயன்படுத்தி கேக்குகள் பிஸ்கட்டுகள் தயாரித்து கடை கடையாக சப்ளை செய்த இரு பேக்கரி நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருச்சி ஆழ்வார் தோப்பில் உள்ள இரு பேக்கரிகள் தினமும் ஆயிரக்கணக்கில் அழுகிய முட்டைகளை வாங்கிச்செல்வதாக உணவு பொருள் பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குள்ள ஸ்ரீ ஆண்டவர் பேக்கரி மற்றும் ஸ்டார் பேக்கரி தயாரிப்பு கூடத்திற்கு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
கேக்குகள் மற்றும் பிஸ்கட்டுகள் தயாரிப்பதற்காக அங்கு தட்டுக்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 8 ஆயிரம் அழுகிய முட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
அழுகிய முட்டையில் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்ய தயாராக இருந்த 215 கிலோ கேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த இரு பேக்கரிகளையும் இழுத்துப்பூட்டி சீல்வைத்தனர். ஸ்டார் பேக்கரி உரிமையாளர் அசாருதீன், ஸ்ரீரீ ஆண்டவர் பேக்கரி உரிமையாளர் கருணாகரன் ஆகியோருக்கு அபராதத்துடன் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்.
இரண்டு பேக்கரிகளின் உணவு பாதுகாப்பு உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் கேக்குகள் மற்றும் பிஸ்கட்டுகள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கடைகளுக்கு மலிவு விலையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப் பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கண்ட கடைகளின் பெயர்களுடன் விற்கப்படும் உணவு பொருட்களை வாங்குவதை மக்கள் தவிர்க்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Comments