சென்னை அடுத்த வடபெரும்பாக்கத்தில் மூன்று நாட்களாகியும் வடியாமல் மழை நீர் தேங்கியுள்ளதாக அப்பகுதியினர் புகார்
சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் முற்றிலும் வடிந்துள்ள நிலையில், ஒரு சில இடங்களில் தொடர்ந்து மழை வெள்ளம் தேங்கியுள்ளதற்கான விளக்கத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாதவரத்தை அடுத்த வடபெரும்பாக்கத்தில் பிரதான சாலையில் மூன்று நாட்களாகியும் மழை நீர் வடியாமல் தேங்கியுள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள், ரெட்டேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் வடபெரும்பாக்கத்தின் பாலாஜி நகர், வெஜிடேரியன் வில்லேஜ் ஆகிய பகுதிகளை கடந்து கொசஸ்தலை வடிநிலப் பகுதியை சென்றடைவதாகவும், ஏற்கனவே தேங்கியுள்ள மழைநீருடன் ஏரி நீர் கலப்பதால் வடிவதில் தாமதம் ஆவதாகவும் தெரிவித்தனர்.
ஆவடியை அடுத்த கன்னடபாளையம் முதல் மங்களம் நகர் வரையிலான பிரதான சாலையில் 3வது நாளாக மழை வெள்ளம் தேங்கியுள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நீர்வளத்துறை அதிகாரிகள், 570 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவில்பதாகை ஏரியில் உள்ள 2 கலங்கலில் இருந்து உபரி நீர் வெளியேற போதிய இணைப்புகள் இல்லாததால் கணபதி அவென்யூ வழியாக வெளியேறி பிரதான சாலைகளில் ஓடுவதாக தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீர் 3 நாட்களாகியும் வடியவில்லை என அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் முறையாக தூர்வாரப்படாததால் மழை வெள்ளம் கொசஸ்தலை ஆற்றில் சென்று கலப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
Comments