மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை
புதுச்சேரி கடை ஒன்றில் சிகெரெட் வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் கடை உரிமையாளரை பாட்டிலால் தாக்கிய ரவுடிகளை கைது செய்யக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு சுயேட்சை எம்.எல்.ஏ தலைமையில் மக்கள் போராட்டம் நடத்தினர்
புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த வசந்த் என்பவர் 100 அடி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது கடைக்கு சென்ற 3 பேர் சிகரெட் வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். பணம் கேட்டதும், வசந்தின் தலையில் சோடா பாட்டிலால் சரமாரியாக தாக்கி கடையில் உள்ள பொருட்களை தூக்கி வீசி விட்டுச்சென்றனர்
வலி தாங்காமல் வசந்த் அலறியபடியே கடைக்கு வெளியே வந்து ரத்தம் சொட்ட சொட்ட அமர்ந்திருந்தார். அக்கம் பக்கத்து மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை சந்தித்து ஆறுதல் கூறிய சுயேட்சை எம்.எல்.ஏ நேரு, தலையில் காயம் அடைந்த வசந்தை ஸ்டெச்சரில் தூக்கி கிடத்தி , ஆதரவாளர்களுடன் ஆளுநர் மாளிகையை நோக்கி சென்றார். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினார்
தாக்குதலில் ஈடுபட்ட மாமூல் ரவுடிகளை விரைந்து கைது செய்யவும், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கூறி கோஷமிட்டனர்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி சமாதானம் செய்தார்.
அதற்குள்ளாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் இருந்து வசந்தை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது
ஆம்புலன்சை மறித்து போராட்டம் நடத்தியவர்களை எம்.எல்.ஏ நேரு வழிவிடச்சொல்லி கலைந்து போகச்செய்தார்.
Comments