அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பாபா சித்திக் சுட்டுக் கொலை.. மருத்துவமனைக்கு திரண்டன அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள்..
மும்பையில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார். பாந்த்ரா கிழக்குப் பகுதியில் உள்ள தமது அலுவலகத்திற்கு சென்று வெளியில் வரும் போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
முகத்தை கைக்குட்டையால் மறைத்த 3 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் நெஞ்சிலும் வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்த பாபா சித்திக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாபா சித்திக்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அஜித் பவார் ஒருநல்ல நண்பரை இழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
மருத்துவமனைக்கு நேரில் வந்த நடிகர்கள் சல்மான் கான், சஞ்சய் தத் ஆகியோர், பாபா சித்திக் குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்தனர்.
பாலிவுட் நட்சத்திரங்களுடன் நெருங்கிப்பழகி இப்தார் விருந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தவர் பாபா சித்திக். சல்மான்கான்- ஷாருக்கான் இடையே ஏற்பட்ட விரிசலை சரி செய்து இருவரையும் நட்பில் இணைய வைத்து புகழ் பெற்றார். பாந்த்ரா தொகுதியில் 3 முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.
Comments