சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..

0 2971


சென்னை மடிப்பாக்கத்தில், காலியான சிலிண்டரை மாற்றும் போது கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் வங்கி பெண் அதிகாரி கருகி பலியானார்.

சேலத்தை சேர்ந்தவர் வின்சி பிரீத்தி, 25 வயதான இவர், சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.

மடிப்பாக்கம் குபேரன் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த வின்சியின் வீட்டில் சம்பவத்தன்று இரவு சமையல் கியாஸ் காலியானதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து தன்னுடன் வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்த மணிகண்டன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட வின்சி, தனக்கு கியாஸ் சிலிண்டர் ஒன்று வேண்டும் என கூறி இருக்கிறார்.

கவுரிவாக்கத்தில் வசித்து வந்த மணிகண்டன் தனது வீட்டிலிருந்து கியாஸ் சிலிண்டர் ஒன்றை எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வின்சியின் வீட்டிற்கு சென்றார்

சமையலறையில் இருந்த காலியான சிலிண்டரை அகற்றிவிட்டு புதிய கியாஸ் சிலிண்டரை ரெகுலேட்டரில் பொருத்தி இருக்கிறார்கள்.

அப்போது கியாஸ் கசிவு இருந்ததை கவனிக்காமல் பேச்சுவாக்கில் அடுப்பில் தீயை பற்ற வைத்திருக்கிறார் வின்சி, அடுத்த நொடி சிலிண்டரில் தீ பற்றிக்கொண்டு பலத்த சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது.

இதில் வின்சி மணிகண்டன் ஆகிய இருவரும் தீயில் கருகி பலத்த காயம் ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு ஓடி வந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த வின்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொதுவாக வீடுகளில் கியாஸ் சிலிண்டரை மாற்றும் பொழுதும், ரெகுலேட்டரை பொருத்தும் போதும் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர் கியாஸ் நிறுவன ஊழியர்கள்.

குறிப்பாக கியாஸ் பயன்பாட்டின் போது வீட்டின் ஜன்னல்கள் கதவுகள் அனைத்தும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

அதே நேரத்தில் கியாஸ் கசிகிறதா என்பதை முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே தீயை பற்ற வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

ஒரு சிறிய கவனக்குறைவு இளம் வங்கி மேலாளரின் உயிரைப் பறித்துள்ளதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments