விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU
சம்பள உயர்வு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகள் அனைத்தையும் சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொண்டதால், இனியும் போராடுவது தேவையற்றது என அந்நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு பணிதான் முக்கியம் என்றும் சிஐடியு அமைப்பு தேவையில்லை என்றும் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு, மருத்துவசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கிவரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களில் ஒரு தரப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1300 பேர் பணியாற்றிவந்த நிலையில், இதில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்திற்கு ஆதரவான தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள், அரசு தரப்பு என 7 முறை சாம்சங் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஊதியத்தோடு ரூ.5000 ஊக்கத்தொகை, தொழிலாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட பேருந்து வசதிகள், கூடுதலான விடுப்புகள், பணிக்காலத்தில் தொழிலாளர் இறந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ.1 இலட்சம் நிவாரணம் உணவு வசதி, மருத்துவ வசதி போன்றவை மேம்படுத்தப்படும் என சாம்சங் உறுதியளித்தது.
தங்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த தொழிலாளர்கள் பணிக்கு திரும்பலாம் என கருதிய நிலையில், சி.ஐ.டி.யு தரப்பினர் தங்களை அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக சாம்சங் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தனர். இதனால், உற்பத்தி பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் தற்காலிக பணியாளர்களைக் கொண்டு சாம்சங் நிறுவனம் இயங்கிவருகிறது.
தொழிற்சங்கப்பதிவு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், இந்த விவகாரத்தை இறுகப்பிடித்துக்கொண்டு தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்யும் போக்கை சி.ஐ.டி.யு கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பள உயர்வு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகள் அனைத்தையும் சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொண்டதால், இனியும் போராடுவது தேவையற்றது என ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு வேலைதான் முக்கியம் என்றும், சி.ஐ.டி.யு சங்கம் முக்கியமில்லை என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் மாநிலங்களுக்குள் கடும் போட்டி இருக்கும் ஒரு வளர்ந்து வரும் நாட்டில் போராட்டம் செய்வது சரியல்ல என்றும், அதுவும் சங்க பிரச்னைக்கு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சிதைப்பது மிக தவறானது என்றும் தொழில் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளர்.
மற்ற கோரிக்கைகளை சாம்சங் நிர்வாகம் ஏற்றுக்கொண்ட நிலையில் சி.ஐ.டி.யு.வை அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக பதிவு செய்ய வேண்டும் என பிடிவாதம் செய்ய வேண்டாம் என தமிழக அரசு கூறியதையும் சி.ஐ.டி.யு காதுகொடுத்து கேட்டதாக தெரியவில்லை. CITU-வின்பிரச்சனையால் சிக்கித்தவிக்கும் சாம்சங் நிறுவனம் தங்களது மாநிலத்திற்கு வந்துவிடுமாறு ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சி.ஐ.டி.யு பிரச்னையால் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயங்கும் சூழல் ஏற்படலாம் என தொழில் கூட்டமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
Comments