சாலையில் வழுக்கி விழுந்த சென்னை ஐ.டி பெண் ஊழியர் தலை சிதறி பலியான சோகம்..! சாலைகளை சரி செய்வது எப்போது ?

0 3929

சென்னை ஆலந்தூரில் பிளவுபட்ட சாலையில் தேங்கிய கழிவுநீரில் இரு சக்கர வாகனத்துடன் வழுக்கி விழுந்த ஐ.டி.பெண் ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை சிதைந்து பலியானார். பெண்ணின் சடலத்தில் தலைக்கு பதில் வெள்ளை பூசணிக்காயில் அவரது புகைப்படத்தை ஒட்டி இறுதி சடங்குகள் செய்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

சாலை விபத்தில் தலை சிதறி பலியான ஐ.டி.ஊழியரின் சடலத்தில், தலைப்பகுதிக்கு பதிலாக புகைப்படத்தை வைத்து இறுதிச்சடங்கு செய்யும் சோக காட்சிகள் தான் இவை..!

கடலூர் மாவட்டம் அரிசிப் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நித்யா , இவரது தோழி ஹரிணி இருவரும், சென்னை சோழிங்கநல்லூரில் தங்கி, தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். 7 ந்தேதி நள்ளிரவு, பல்லாவரத்தில் இருந்து டி.வி.எஸ்., ஜூபிடர் வாகனத்தில் தோழிகள் இருவரும் தலைக்கவசம் அணிந்தபடி வீடு திரும்பினர்.

பரங்கிமலை வேளச்சேரி உள்வட்டச் சாலையில், தில்லை கங்கா நகர் சுரங்கப்பாலத்தின் அடியில் பிளவுபட்ட சிமெண்டு சாலை நிலையில் தேங்கி இருந்த கழிவுநீரில் அவர்களது ஸ்கூட்டர் வழுக்கியதால், இருவரும் கீழே விழுந்தனர். நித்யாவின் தலையில் பின்னால் வந்த மினி லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் ஹெல்மெட் கழண்டு ஓட தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

வாகனத்தை ஓட்டி வந்த ஹரிணி, லேசான காயத்துடன் உயிர் தப்பினார். உயிரிழந்த நித்யாவின் உடலை கைப்பற்றி, போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுனரான, ராணிப்பேட்டையைச் சேர்ந்த மோகன்குமார் என்பவரை, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்து நித்யாவின் உடல் கடலூர் அரிசி பெரியாங்குப்பம் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு தயார் செய்தனர். தலை சிதைந்து அவர் உயிரிழந்த காரணத்தினால் அவரது தலைக்கு பதில் அந்த இடத்தில் வெள்ளை பூசணிக்காயை வைத்து அதன் மேல் அவரது புகைப்படத்தை வைத்து அதனை அவரது தலையாக பாவித்து கனத்த இயத்துடன் இறுதி சடங்குகளை செய்தனர்.

கிராமப்புறத்தில் படித்தாலும், ஐ.டி நிறுவனத்தில் நல்ல பணியில் இருந்த நித்யாவின் வாழ்க்கை, தரமற்ற சாலையில் தேங்கிய கழிவு நீரால் காவு வாங்கப்பட்டிருப்பது சோகத்திலும் சோகம் என்றால், இன்னும் எத்தனை நாளைக்கு இது போன்ற சாலைகளை சீரமைக்காமல் மரணக்குழிகளாகவே போட்டு வைத்திருக்க போகிறார்கள் ? என்பதே வாகன ஓட்டிகளின் ஆதங்கமாக உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments