ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பள்ளத்தாக்கில் சரிந்த காங்கிரஸ் 2வது பெரிய கட்சியான பா.ஜ.க காஷ்மீர் ஆப்பிளை ருசிக்கத் தவறிய காங்கிரஸ் ஜம்முவில் மீண்டும் சாதித்த பா.ஜ.க

0 249

எல்லை மாநிலமான ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைத்தன. எனினும் இந்த ஆட்சி 3 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2018 ஜூனில் பாஜக ஆதரவை விலக்கிக் கொண்டதால் மெகபூபா முப்தி அரசு பதவி விலகியது. இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 10 ஆண்டுகளுக்கு பின் பெரிய வன்முறையின்றி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில், காஷ்மீர் பிராந்தியத்தில் 47 தொகுதிகளும், ஜம்மு பிராந்தியதில் 43 தொகுதிகளும் அடங்கும். பெரும்பான்மையான இடங்களில் வென்று காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்திருந்தாலும், இதுவரை இல்லாதளவுக்கு தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தனிப்பட்ட கட்சியாக பெறும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 18 சதவீத வாக்குகளுடன் 12 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், தற்போதைய தேர்தலில், அக்கட்சி, 12% வாக்குகளுடன் வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2014 தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் கிட்டத்தட்ட 23 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக, 25 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில், 29 இடங்களை கைப்பற்றியதுடன், வாக்குசதவீதம் 26 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை பாஜக பெறாவிட்டாலும், இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் காஷ்மீரில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை எனக்கூறப்படுகிறது. அதேபோல், பிரிவிரினை வாதத்திற்கு ஆதரவு அமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஒருவரும் வெற்றி பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments