வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்
சென்னை மெரீனாவில் நடந்த வான் சாகசத்தை காண வந்த மக்கள் குடிநீர் கிடைக்காமலும், வெயில் கொடுமையாலும், கூட்ட நெரிசலில் சிக்கியும் ஏராளமானோர் மயக்கமடைந்த நிலையில் 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னை மெரீனாவில் வான்சாகச நிகழ்ச்சியை கான சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் காலை 7 மணி முதலே மெரீனாவை நோக்கி மக்கள் வரத்தொடங்கி விட்டனர்
கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு தடை என்பதால் தங்கள் வாகனத்தை விட்டு 2 முதல் 3 கிலோமீட்டர் வரை நடந்தே கடற்கரையை அடைந்தனர்.
காலை 11 மணிக்கு எல்லாம் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடியதால் மெரீனா குலுங்கியது
விண்ணதிர நடந்த வான் சாகச நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் இருந்து சாலைக்கு ஒரே நேரத்தில் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் எண்ணிக்கையில் குறைவாக காணப்பட்டதால் உதவிக்கு ஆள் இன்றி மக்கள் விழி பிதுங்கி போயினர்
பாதுகாப்பு காரணங்களுக்காக முன் கூட்டியே மெரீனாவில் கடைகள் அப்புறப்படுத்த பட்டதால் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட வாங்கி குடிக்க இயலவில்லை
ஒரு புறம் உச்சி வெயில், மறுபுறம் கூட்ட நெரிசில் குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர் அவதிக்குள்ளாயினர்
பலருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது, பலர் மயங்கி விழுந்தனர். 230 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தவர்களில் 4 பேர் பலியாகினர் 90 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்
நிகழ்ச்சியை பார்த்து விட்டு வீடு மனைவி மற்றும் குழந்தையுடன் பைக்கில் வீடு திரும்பிய தனியார் நிறுவன ஊழியர் கார்த்திகேயன் மயங்கி விழுந்து பரிதாபமாக பலியானார்
பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்த நிலையில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்
தண்ணீர் இன்றி 5 பேர் உயிரிழந்த நிலையில், மின்சார ரெயில்களில் உயிரை பணயம் வைத்து மக்கள் பயணித்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
2 லட்சத்துக்கு அதிகமான பயணிகள் ரெயில்களில் பயணித்ததாக கூறப்படுகின்றது.
மெட்ரோ ரெயிலில் 3 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பலமணி நேரம் நெரிசலுக்கு இடையே பயணித்துள்ளனர்
மாநகர பேருந்துகள் இரு சக்கர வாகனங்கள் , ஆட்டோக்கள், கார்கள் மூலமாக லட்சக்கணக்கான மக்கள் சாலையில் காத்திருந்து தங்கள் வீடு வந்து சேர்ந்ததாக தெரிவித்தனர்.
Comments