ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

0 1495

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய 4 ரவுடி கும்பல்களை ஒன்றிணைத்து 6 மாதமாக ஸ்கெட்ச் போடப்பட்டதாக தெரிவித்துள்ள போலீஸார், 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களையும் தெரிவித்துள்ளனர்.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை ஐந்தாம் தேதி தான் புதியதாக கட்டி வரும் வீட்டின் கட்டுமானப்பணியை பார்வையிட்ட போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு காரணத்தை கூறி வந்த நிலையில் 4,892 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் சென்னை போலீஸார்.

முக்கிய ரவுடிகளான நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பெண் தாதா அஞ்சலை, ஆற்காடு சுரேஷின் தம்பி பொண்ணை பாலு உள்ளிட்ட 28 நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததாக தெரிவித்தனர் போலீஸார்.

அரசியல் மற்றும் சமூக ரீதியாக அசுர வளர்ச்சி அடைந்து வந்த ஆம்ஸ்ட்ராங் வளர்ச்சியை தடுக்கவே கொலை செய்யப்பட்டதாக குற்றப்பத்திரிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் பிரமுகரான அஸ்வத்தாமனுடன் ஏற்பட்ட நிலத் தகராறு, ரவுடி சம்போ செந்திலை கட்டப்பஞ்சாயத்து ஒன்றில் மிரட்டி 30 லட்சம் ரூபாய் பெற்றது, ஆற்காடு சுரேஷ் மற்றும் தென்னரசு கொலை வழக்குகள் ஆகியவற்றில் ஏற்பட்ட 4 முன்விரோதங்களே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான முக்கிய காரணமாக குறிப்பிட்டுள்ளனர் போலீஸார்.

ஆற்காடு சுரேஷ் கொலையின் போது அவரது மனைவி எடுத்த சபதத்தால் ஒரு வருடத்திற்குள் கொலையை அரங்கேற்ற நினைத்து, ரவுடி நாகேந்திரனே மற்ற அனைவரையும் ஒருங்கிணைத்ததாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறையில் உள்ள நாகேந்திரன், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்போதெல்லாம் கொலைக்கான திட்டத்தை தீட்டுவதும் அவரது மகன் அஸ்வத்தாமன் அதனை செயல்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் நடமாட்டத்தை உளவு பார்த்து கண்டறிவதற்காகவே 6 மாதமாக ரெக்கி ஆபரேஷன் நடத்தியதாகவும், கொலைக்கு செலவிடப்பட்ட பத்து லட்சம் ரூபாயை ரவுடி சம்போ செந்தில் வழங்கியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முதலில் கைது செய்யப்பட்ட 11 பேரிடம் நடத்தப்பட்ட தொழில்நுட்ப ரீதியான விசாரணை மூலமாகவே பின்புலத்தில் செயல்பட்ட நாகேந்திரன், சம்பவம் செந்தில், அஸ்வத்தாமன் ஆகியோர் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளனர் போலீஸார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நபர்களின் 63 வங்கிக் கணக்குகளிலிருந்த ஒன்றரை கோடி ரூபாயை முடக்கியதோடு 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் மற்றும் 750 ஆவணங்கள் குற்றப்பத்திரிகைக்குள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் போலீஸார்.

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வரும் ரவுடி சம்பவம் செந்தில், அவனது கூட்டாளி மொட்டை கிருஷ்ணனை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments