பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..
இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்திய ஈரான், அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப் போவதாக பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. லெபனானில் தரைவழித்தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹெஸ்புல்லா படையினருக்கு ஆதரவாக, லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான நவீன ஏவுகணைகளை அனுப்பி ஈரான் தாக்குதல் நடத்திய காட்சிகள் தான் இவை..
தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேமை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் விமானத்தளம் கடும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பெரும்பாலான ஏவுகணைகளை தங்களது வான் பாதுகாப்பு அரண் மூலம் தூள் தூளாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை முறியடிக்க இஸ்ரேலுக்கு உதவி செய்ததாக அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஏராளமான ஏவுகணைகளை அமெரிக்கா இடைமறித்து வீழ்த்தியதாகவும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் ஈரான் உரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வான்வழி தாக்குதல் நடத்தியதில், ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாகவும், அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப் போவதாக ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் என ஈரான் உளவுத்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே தெற்கு லெபனான் எல்லை பகுதியில் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹெஸ்புல்லாவின் நிலைகள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதாக கூறப்படுகிறது.
தரை வழி தாக்குதலின் போது இஸ்ரேலிய ராணுவத்தை சேர்ந்த 12 க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தங்களது நாட்டுக்குள் நுழைய இஸ்ரேல் தடை விதித்துள்ளது. ஈரானுக்கு கண்டனம் தெரிவிக்காமல் தங்கள் மீது மட்டும் அவர் குற்றம் சுமத்துவதாக கூறி அந்நாடு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளதால், தங்களது நாட்டினரை பத்திரமாக வெளியேற்றும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றன.
ஈரானுக்கு பதிலடி கொடுக்காமல் இஸ்ரேல் அடங்காது என்றும், முழுமையான போராக இது மாறது ஆனால், குறிப்பிட்ட பகுதிகளை இரு நாடுகளும் மாறி மாறி வான்வழியாக தாக்கிக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச போர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments