வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

0 1636

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து விவசாயக் கூலி வேலைக்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரெயிலில் சென்னை வந்த தொழிலாளி ஒருவர், வேலை கிடைக்காததால், சாப்பிட காசு இல்லாமல் பசிக்கொடுமையால் வேகாத மீனை  தின்று உயிரிழந்த கொடுமை சென்னையில் நிகழ்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வேலை இருப்பதாக ஒப்பந்ததாரர் சொன்ன பேச்சைக்கேட்டு, கடந்த மாதம் பத்தாம் தேதி மேற்கு வங்கத்திலிருந்து வந்த 11 விவசாயக்கூலி தொழிலாளிகள் பொன்னேரியில் இருந்து சென்னை சென்ட்ரல் நிலையம் வரை நடந்தே வந்தனர்.
அங்கு சென்று மூன்று நாட்களாக காத்திருந்தும் வேலை கிடைக்காததால் செய்வதறியாது தவித்த அவர்கள் மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்பிச் செல்வதற்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளனர்.

கையில் பணமில்லாமல், ஒருவேளை உணவு கூட கிடைக்காத நிலையில் பிச்சை எடுக்க மனமில்லாததால், பசியின் கொடுமையால் நான்கு தொழிலாளிகளும் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். கடந்த 16ஆம் தேதி மயங்கி விழுந்த நான்கு பேரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ளவர்களை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

வேலைக்காக தமிழகத்திற்கு வந்து சிக்கிக் கொண்டவர்கள் தொடர்பாக மேற்கு வங்க கவர்னர் ஆனந்த் போஸ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், அவர் தனது சட்ட ஆலோசகர் மூலம் உதவி செய்ய உத்தரவிட்டார். அதன் படி சட்ட ஆலோசகரின் தந்தையான சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சசிதரன், விவசாயக் கூலிகள் ஒவ்வொருவருக்கும் பண உதவி அளித்து சொந்த மாநிலம் திரும்ப உதவி செய்தார். இதில் பசி கொடுமையில் இருந்து மீண்ட விவசாயக் கூலிகள் 10 பேரில், 9 பேர் சொந்த மாநிலத்திற்கு ரயில்கள் மூலமாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் விமானம் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சமர்கான் என்ற 35 வயது தொழிலாளி மட்டும் பசி தாங்க முடியாமல், அரைகுறையாக வெந்த மீனைத் தின்று பசியாற முயன்றதால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு தொடர்ந்து வயிற்று போக்கு, வாந்தி என கவலை கிடமாகவே இருந்த நிலையில் உடல் உறுப்புகள் செயலிழந்து மூளைக் காய்ச்சலால் சமர்கான் உயிரிழந்ததாக ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் தெரிவித்தார்

உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், சமர்கான் உடலை சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்ல காசில்லாமல் அவதியுற்ற நிலையில் , முன்பு மேற்கு வங்கத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணிபுரிந்த, தனியார் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் இஸ்ரேல் ஜெபசிங் தன் சொந்த செலவில் சமர் கான் உடலை விமானம் மூலம் அனுப்ப உதவினார்

பட்டினியால் உயிர் இழந்த மேற்கு வங்க தொழிலாளர் சமர் கானின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் , தனது சொந்த பணத்தில் இருந்து 60 ஆயிரத்தை உறவினர்களிடம் கொடுத்து அனுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments