கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்
திருச்சூரில் ஏ.டி.எம்.களில் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து விட்டு தமிழகத்தில் நாமக்கல்லுக்குள் கண்டெய்னர் லாரியுடன் புகுந்த கொள்ளைக்கும்பலை விரட்டிப்பிடித்து சுற்றி வளைத்த நிலையில், போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கொள்ளையனை என்கவுன்டர் செய்தனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்த கும்பல் தப்பி வந்த கண்டெய்னர் லாரியை நாமக்கல் போலீசார் சுற்றி வளைத்த காட்சிகள் தான் இவை..!
கேரள மாநிலம் திருச்சூரில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் ஹூண்டாய் கிரெட்டா காரில் வருவதாக முதலில் கூறிய நிலையில், பின்னர் காரை கண்டெய்னரில் ஏற்றிக்கொண்டு தமிழக எல்லைக்குள் நுழைந்துள்ளதாக அம்மாநில போலீஸார் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் அலார்ட் செய்திருந்தனர். இதையடுத்து நாமக்கல் பள்ளிப்பளையம் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நிற்காமல் சென்ற ராஜஸ்தான் பதிவெண் கொண்ட அந்த கண்டெய்னர் லாரியை சன்னியாசிப்பட்டி அருகே விரட்டி பிடித்தனர்.
அந்த லாரியை வெப்படை காவல் நிலையத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்ற போது கண்டெய்னருக்குள் இருந்து சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்து, லாரியை நடுவழியில் நிறுத்தி உள்ளே என்ன இருக்கிறது? என்று பார்த்த போது, லாரிக்குள் வெள்ளை நிற கிரிட்டா கார் இருந்ததாக சேலம் டி.ஐ.ஜி உமா தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் ஹரியானாவை சேர்ந்த கொள்ளையர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஐ.ஜி உமா தெரிவித்தார்
டெல்லியில் இருந்து சென்னை துறைமுகத்தில், சரக்கை இறக்கிவிட்டு, லாரி திருச்சூர் சென்றதாகவும், கிரிட்டா காரில் வந்த கும்பல் அங்கு காத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. இரு குழுக்களும் சேர்ந்து கூகுள் மேப் பார்த்து எஸ்.பி.ஐ ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடித்ததாக டி.ஐ.ஜி. உமா தெரிவித்தார்
கொள்ளை கும்பல் சிக்கிய தகவல் அறிந்து கேரள போலீசார் வெப்படை காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் 3 ஏ.டி.எம்களில் சிசிடிவி காமிரக்களில் ஸ்பிரே பெயிண்ட் அடித்த இக்கும்பல் கியாஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம் எந்திரங்களை உடைத்து 65 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தாக திருச்சூர் எஸ்.பி இளங்கோ தெரிவித்துள்ளார்.
Comments