ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

0 1266

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, கொள்ளையர்களுடன் தறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரியை போலீசார் விரட்டிச்சென்ற போது நடந்த மோதலில், 2 போலீசார் காயமடைந்தாகவும், போலீசாரின் என்கவுண்டரில் கொள்ளைகும்பலை சேர்ந்த ஒருவர் பலியான நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கொள்ளையடித்துவிட்டு தப்பிய கும்பல் குறித்து கேரள திருச்சூர் மாவட்ட போலீசார் கோவை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட போலீசார் அலர்ட் செய்திருந்தனர். கொள்ளை கும்பல், வெள்ளை நிற கார் அல்லது கண்டெய்னரில் தப்பிக்கலாம் எனவும் அந்த அலர்ட்டில் கூறப்பட்டிருந்தது.

பாலக்காடு அருகே இருவேறு சோதனைச்சாவடிகளில் கண்டெய்னர் லாரி ஒன்றை அம்மாநில போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பி தமிழக எல்லைக்குள் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த வெப்படை நால்ரோட்டு பிரிவில் போலீசார் கண்டெய்னரை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது போலீசார் மீது மோதுவது போல் சென்று லாரியை திருச்செங்கோடு நோக்கி வேகமாக திருப்பியதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார், 4 பைக்குகள் மீது மோதிவிட்டு நிற்காமல் அந்த கண்டெய்னர் லாரி வேகமாக சென்றுள்ளது.

இதையடுத்து அந்த கண்டெய்னர் லாரியை போலீசார் விரட்டிச்சென்றுள்ளனர். பச்சாம்பாளையம் அருகே கண்டெய்னரை சுற்றிவளைத்த போலீசார் லாரியை நிறுத்துமாறு ஓட்டுநரை நோக்கி கற்களை வீசியதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ளது. அப்போது சாலையின் வலது பக்கம் திரும்பிய கண்டெய்னர் லாரியை நெருங்கிய வெப்படை காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித், குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தவமணி ஆகியோர் மீது ஓட்டுநர் மற்றும் உடன் இருந்தவர்கள் கடப்பாரையைக்கொண்டு தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். அதில் இருவரும் காயமடைந்த நிலையில், தற்காப்புக்காக போலீசார் சுட்டதில், ஒட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். துப்பாக்கிச்சுட்டு சத்தத்தை கேட்டதும் கண்டெய்னர் லாரிக்குள் பதுங்கியிருந்த 6 பேர் கதவை திறந்து கைகளை உயர்த்தியபடி சரண் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கண்டெய்னரை திறந்து பார்த்ததில் வெள்ளை நிற ஹூண்டாய் கிரெட்டா கார் இருந்ததும், அதற்குள் கட்டுக்கட்டாக ரொக்கம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த பணம் வெள்ளிக்கிழமை அதிகாலை கேரள திருச்சூரில் 3 ஏ.டி.எம்.களின் மெஷின்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

திருச்சூரில் சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 3 எஸ்.பி.ஐ ஏ.டி.எம்களில் உள்ள இயந்திரங்களை கேஸ் கட்டர்களை கொண்டு உடைத்து 65 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த முகமூடிக்கொள்ளையர்கள் தான் நாமக்கல்லில் சிக்கியுள்ளதாக திருச்சூர் மாவட்ட எஸ்.பி இளங்கோ உறுதிப்படுத்தியுள்ளார். கொள்ளை நடத்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளைக்கொண்டு குற்றத்திற்கு பயன்படுத்திய கார் மற்றும் நபர்களை போலீசார் அடையாளம் காண முயற்சி செய்துள்ளனர்.

தீரன் பட பாணியில், கொள்ளையடித்த பணத்தை காருடன் கண்டெய்னருக்குள் ஏற்றி, மறைத்து வைத்து போலீசாரின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு வெளிமாநிலங்களுக்கு தப்பிச்செல்வதை இக்கும்பல் வழக்கமாக கொண்டிருப்பதாக திருச்சூர் எஸ்.பி. இளங்கோ தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் சிக்கியுள்ளவர்களை பிடித்து விசாரித்து விசாரிக்க கேரள தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேரள போலீசாரிடம் சிக்காமல், தப்பிய ஏ.டி.எம் கொள்ளை கும்பலை உயிரை பணயம் வைத்து சுற்றிவளைத்து பிடித்த நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு டிஜிபி பாராட்டு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments