காருக்குள் குடும்பமே சடலமாக கிடந்த கொடூரம்.. பரபரப்பை கிளப்பிய திகில் சம்பவம்.. நடந்தது என்ன?

0 1383

புதுக்கோட்டையில் திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம், காருக்குள் தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நகர சிவமடம் என்ற மடம் உள்ளது. இந்நிலையில் 25 ஆம் தேதியன்று காலை 7 மணியளவில் அவ்வழியாக சென்ற காவலாளி ஒருவர் மடத்திற்கு முன்பாக வேகனார் கார் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார்.

முன்பக்க ஜன்னல் திறந்த நிலையில் நின்று கொண்டிருந்த அந்த காரில் குடும்பத்தினர் உறங்குவதாக நினைத்துக்கொண்ட காவலாளி, காரில் இருந்தவர்களை எழுப்ப முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. காருக்குள் 3 பெண்கள் 2 ஆண்கள் என மொத்தம் 5 பேர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவலாளி உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரில் இறந்து கிடந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் இறந்தவர்கள் சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா அருகே உள்ள ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த மணிகண்டன். அவரது மனைவி நித்யா, மகன் தீரன், மகள் நிகரிகா, மற்றும் மாமியார் சலோஜா என்பது தெரியவந்தது.

காரில் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அதில் , கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக எழுதி வைதிருந்ததாக கூறப்படுகிறது.

மணிகண்டன் அவரது வீட்டிலேயே எஸ்.எம் மெட்டல் என்ற அலுவலகம் நடத்தி வந்ததாகவும் கிருஷ்ணகிரி நாமக்கல் ஆகிய பகுதிகளில் காப்பர் நிறுவனமும் நடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தொழில் நஷ்டத்தால், கடன் தொல்லை ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. காரில் மது பாட்டிலும் கப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மதுவில் விஷம் கலந்து அருந்தினார்களா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சேலம் மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டைக்கு எதற்காக வந்தனர்?, எதற்காக நகர சிவ மடம் அருகே காரை நிறுத்திவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments