உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தப்பா ? குமுறும் முதல் பெண் டபேதார்..!

0 422

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக நியமிக்கப்பட்ட மாதவி , மணலி மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், உதட்டில் அதிக சாயம் கொண்ட லிப்ஸ்டிக் போட்டு பணிக்கு வந்ததற்காக தன்னை மேயர் பணியிடமாற்றம் செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்

சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியாவுக்கு முன்பாக வெள்ளை உடை... உதட்டில் லிப்ஸ்டிக்.. பக்கா மேக் அப் என வலம் வந்தவர் டபேதார் மாதவி. தமிழகத்திலேயே முதல் பெண் டபேதார் என்ற பெருமையுடன் பணிபுரிந்து வந்த மாதவி, கடந்த மாதம் மணலி மண்டலத்துக்கு திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட மெமோவில் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள மாதவி, நீங்கள் என்னை உதட்டுச் சாயம் பூச வேண்டாம் என்று உத்தரவிட்டீர்கள், ஆனால் நான் அதனை ஏற்கவில்லை.

இது ஒரு குற்றமாக இருந்தால், நான் உதட்டுச்சாயம் பூசுவதை தடைச்செய்யும் அரசு உத்தரவை எனக்குக் காட்டுங்கள் என்றும் அதற்கு உரிய பதில் அளிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் இது போன்ற அறிவுறுத்தல்கள் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் மாதவி தெரிவித்துள்ளார்.

50 வயதான மாதவியின் பணியிட மாற்றத்துக்கு அவர் லிப்ஸ்டிக் பூசும் விவகாரம் காரணமல்ல என்று மறுத்துள்ள மாநகராட்சி நிர்வாகம், மாதவி பணியில் அலட்சியமாக இருந்ததாகவும், உயர் அதிகாரிகளின் உத்தரவை மதிக்காமல் இருத்தல், உரிய நேரத்தில் பணிக்கு வராதது, மேயர் அறையில் மட்டுமே இருக்க வேண்டிய அவர் பல இடங்களுக்கு சென்று வந்ததால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

மாநகராட்சியில் தான் யாருடனும் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. தெரிந்தவர்களுடன் பேசினால் கூட குற்றம் என்றனர் என்ற மாதவி, தனக்கு வீடு ஆவடியில் இருப்பதாகவும், அங்கிருந்து தினமும் மணலிக்கு பணிக்கு வந்து செல்வது சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments