இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

0 1321

அதிக விபத்துகள் நடைபெறும் தொப்பூர் கணவாய் பகுதியில் முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் தனியார் ஆம்னி பேருந்தின் ஓட்டுநர்களை அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் புரட்டி எடுத்தனர்.

சாலை தடுப்பில் தலைகீழாக தொங்கினாலும் சண்டையை நிறுத்தாத சண்டைக் கோழிகளாக அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மோதிக் கொள்ளும் காட்சி தான் இவை..

தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்தும், பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்தும் இந்தியாவிலேயே அதிக விபத்து நடைபெறும் பகுதிகளில் ஒன்றான தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தன.

அதிக அபாயம் கொண்ட பகுதியில் 2 பேருந்துகளும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது. அதில், அரசுப் பேருந்துக்கு வழி விடாததோடு உரசுவது போல ஆம்னி பேருந்து சென்றதாக சொல்லப்படுகிறது.

ஆத்திரமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் வெங்கடாஜலம், ஆம்னி பேருந்தை முந்தி சென்று குறுக்காக நிறுத்தினார். இதனால், இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் கீழே இறங்கி வாக்குவாதம் செய்த போது பயணிகளும் கீழே இறங்கினர்.

ஆம்னி பேருந்து ஓட்டுநர் லோகுவுடன் அரசுப் பேருந்து நடத்துநர் மாதேஷ் சாலையில் உருண்டும், சாலை தடுப்பு கம்பியில் தலைகீழாக தொங்கிக் கொண்டும் தாக்குதலில் ஈடுபட, அரசு பேருந்து ஓட்டுநர் வெங்கடாஜலம் தன் பங்குக்கு ஆம்னி பேருந்தின் மாற்று ஓட்டுநர் ஒருவரை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தார்.

பயணிகளில் சிலர் இந்த சண்டையை விலக்கி விட, ஆத்திரக்கார பயணிகளில் சிலர் சண்டையில் இணைந்து ஒரு சில குத்துகளையும் விட்டனர்.

ஒருவழியாக, சண்டை முடிவுக்கு வர இரண்டு பேருந்துகளும் தொப்பூர் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் செல்லப்பட்டன. இதனையடுத்து, இருதரப்பு புகாரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments