ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்
சென்னை துறைமுகத்தில் இருந்து 35 கோடி ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்புகள் அடங்கிய கண்டெய்னரை போலியான ஆவணங்களை காண்பித்து லாரியில் கடத்திச் சென்ற கும்பலை போலீசார் ஜி.பி.எஸ்.டிராக்கிங் மூலம் கண்டறிந்தனர்.
பெங்களூரை சேர்ந்த பிரபல தனியார் நிறுவனத்துக்கு சீனாவில் இருந்து 35 கோடி ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் 40 அடி கண்டெய்னரில் கப்பல் மூலமாக சென்னை துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பெங்களூரு நிறுவனம் அளித்த டெலிவரி அனுமதிச்சீட்டுடன் கடந்த 11 ந்தேதி அந்த கண்டெய்னரை ஏற்றிச்செல்ல தனியார் லாரி நிறுவன ஓட்டுனர் சென்றார்.
அந்த கண்டெய்னரை ஏற்கனவே டெலிவரி செய்து விட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து எலக்ட்ரானிக் பொருட்கள் அடங்கிய கண்டெய்னரை யாரோ மர்ம நபர்கள் போலியான ஆவணங்களை பயன் படுத்தி திருடிச்சென்று விட்டதாக CITPL நிறுவன ஆபரேஷன் மேலாளர் பொன் இசக்கியப்பன் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் கப்பலில் வந்த கண்டெய்னரில் பொறுத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் மூலம் அந்த கெண்டெய்னர் திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரில் உள்ள தனியார் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர். அங்கு சென்று பார்த்த போது வேறு பெயிண்ட் அடிக்கப்பட்ட காலியான கண்டெய்னர் மட்டுமே அங்கிருந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து லாரியின் உரிமையாளர் மணிகணடனை பிடித்து விசாரித்த போது இந்த கொள்ளை சம்பவத்தின் பகீர் பின்னணி அம்பலமானது.
சென்னை துறைமுகத்தில் சரக்குகளை டெலிவரி செய்யும் பணியை மேற்கொண்டு வரும் ஆவணப்பிரிவு ஊழியரான இளவரசனுக்கு கண்டெய்னரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் வருவது தெரிந்துள்ளது. உடன் பணிபுரியம் விக்கி என்பவருடன் சேர்ந்து போலியாக அனுமதி ஆவணங்களை தயார் செய்து, மணிகண்டனுக்கு சொந்தமான லாரியை வர வைத்து அந்த கண்டெய்னரை தூக்கிச்சென்றுள்ளனர்.
அந்த கண்டெய்னரின் அடையாளத்தை மாற்றியதோடு, இடைத்தரகர்களுடன் சேர்ந்து அதில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை வேறு இரு சரக்கு வாகனங்களில் மாற்றி விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
லாரிகளை ஏற்பாடு செய்யும் இடைத்தரகர்கள் திருவொற்றியூர் ராஜேஷ் , நெப்போலியன் ,சிவபாலன் ,திண்டுக்கல் முத்துராஜ் , ட்ரெய்லர் லாரி உரிமையாளர் மணிகண்டன், டிரைவர் விழுப்புரம் பால்ராஜ் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். திருட்டுக்கு திட்டம் தீட்டிய CITPL நிறுவன ஊழியர்கள் இளவரசன், விக்கி , இடைத்தரகர் சங்கரன் , ஆகிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து இரு ஈச்சர் சரக்கு வாகனங்கள், கண்டெய்னர், திருடு போன எலக்ட்ராணிக் பொருட்களை மீட்ட போலீசார் அவற்றை சென்னை துறைமுக கழகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
Comments