16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
பீஸ்ட், வாரிசு படங்கள் மூலம் தமிழில் பிரபலமான தெலுங்கு திரையுலக நடன இயக்குனர் ஜானி, பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். 16 வயதில் இருந்து பாலியல் தொல்லை அளித்ததாக ஜானி மீது 21 வயது பெண் நடன கலைஞர் அளித்த புகார் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
பீஸ்ட் படத்தின் ஒரே பாட்டால், ஓவர் நைட்டில் தமிழ்ரசிகர்களை கவர்ந்தவர் தெலுங்கு நடன இயக்குனர் ஜானி..!
ஜாலியோ ஜிம்கானா, ரஞ்சிதமே என அடுத்தடுத்து விஜய்க்கு வித்தியாசமான நடன அசைவுகளை காட்சிகளாக்கி தமிழ் சினிமாவிலும் குறிப்பிடத்தக்க நடன இயக்குனரானார் ஜானி.
இந்த நிலையில் ஜானி மீது தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த 21 வயதான பெண் நடன கலைஞர் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் 16 வயது முதல் நடன இயக்குநர் ஜானி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், படப்பிடிப்புக்காக சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் போது தனக்கு தொடர்ச்சியாக பாலியல் ரீதியிலான தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
துணை நடன இயக்குநராக தன்னை வேலையில் சேர்த்துக் கொண்ட ஜானி மும்பையில் நடன நிகழ்ச்சிக்காக சென்றபோது ஹோட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மேலும் இரண்டு பேர் பாலியல் ரீதியில் தன்னை தாக்கியதாகவும் கூறியுள்ளார். இது மட்டுமின்றி ஒரு முறை புகைப்படம் எடுக்கும் போதும் தன்னை தாக்கி, மனரீதியிலான துன்புறுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். நடன இயக்குநர் ஜானி மதம் மாறி தன்னை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு அவரது மனைவியும் துணையாக இருந்ததாகவும் இருவரும் தன்னை தாக்கியதாகவும் அந்த பெண் கலைஞர் கூறியுள்ளார்
இந்த புகாரின் பேரில் ஆந்திரப் பிரதேச போலீஸார் ஜானி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த பாலியல் புகார் எதிரொலியாக நடன இயக்குநர் ஜானி தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் ஜனசேனா கட்சியில் உறுப்பினராக இருந்த ஜானியை அக்கட்சியில் இருந்து நீக்கி ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் உத்தரவிட்டார்.
தனக்கு எதிரான பாலியல் புகார் வலுவடைந்ததை அடுத்து தலைமறைவான நடன இயக்குநர் ஜானியை பெங்களூருவில் வைத்து ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.அவரை ஹைதராபாத் கொண்டு சென்று விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவர் ஜான்சி கூறுகையில், திரைத்துரையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
ஏற்கனவே கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்கள் , இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டிருப்பது தென்னிந்திய சினிமாவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெலுங்கு சினிமாவில் பாலியல் புகாருக்கு முதல் முறையாக நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Comments