போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
வாகனச்சோதனை நடத்திய போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, திண்டிவனம் நேரு பஜாரில் குடி போதையில் காரை ஓட்டிச்சென்ற பெங்களூரு இளைஞர்களை, விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து , மடக்கிப்பிடித்த இளைஞர்கள் சிலர் கும்பலாக தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
போதையில் பாதை மாறி காரை ஓட்டிச்சென்றதால் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி வருவதாக நினைத்து பெங்களூரு பாய்ஸை பொதுமக்கள் தாக்கிய காட்சிகள் தான் இவை..!
திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்த கருப்பு நிற கிரிட்டா கார் ஒன்று ஓரம் கட்டி நிறுத்தப்பட்டது. போலீசார் அந்த காரை நோக்கிச்சென்றதும், ஓட்டுனர் காரை பின்பக்கமாக இயக்க தொடங்கினார். நேரு பஜாருக்குள், ரிவர்ஸில் வேகமாக புகுந்தது
போலீசார் அந்த காரை விரட்டினர். அரசு பேருந்து ஒன்று குறுக்கே வந்ததால் காரை ஓட்டிவந்தவர்கள் காரை நிறுத்தினர். இருவர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய நிலையில் காருக்குள் இருந்த இருவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
விபத்து ஏற்படுத்தி விட்டுத்தான் காருடன் தப்பி வந்திருப்பதாக கருதி அங்கு கூடிய இளைஞர்களில் சிலர் காரை கல்வீசி தாக்கி உடைத்ததோடு, காரில் இருந்த அந்த இருவரையும் வெளியே இழுத்துச்சென்று சரமாரியாக தாக்கினர்
தாக்குதலில் காயம் அடைந்த இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்துச்செல்ல போலீசார் முயன்ற நிலையிலும், விடாமல் சட்டை கிழிந்த நிலையில் காணப்பட்ட இளைஞரை விரட்டி விரட்டி தாக்கினர்
கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் மீட்டு ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். விசாரணையில் பெங்களூரை சேர்ந்த கிரிதரயாதவ், உடற்கல்வி ஆசிரியரான முகமது முஸ்தபா, தருண், பிரஞ்சவ் ஆகியோர் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மூக்கு முட்ட குடித்து விட்டு வாகனத்தை ஓட்டிவந்த நிலையில் போலீசில் இருந்து தப்பிப்பதற்காக காரை ரிவர்ஸில் ஓட்டிச்சென்றதாக போலீசில் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி வருவதாக தவறாக நினைத்து காரை அடித்து உடைத்த உள்ளூர் இளைஞர்களை போலீசார் வீடியோ காட்சி மூலம் அடையாளம் கண்டு தேடி வருகின்றனர்.
Comments