ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

0 724

லெபனானில் தொலைதொடர்புக்கு பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் அடுத்தடுத்து வெடித்ததில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பேஜர் கருவிகளுக்குள் உள்ளீடு செய்யப்பட்டிருந்த டெட்டனேட்டர்களை வெடிக்கச்செய்து இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதா என புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் தெரிவித்துள்ளன.

லெபனானில் ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் அடுத்தடுத்து வெடித்ததில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் உலகளவில் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. செல்போன்களை பயன்படுத்தினால், அதில் உள்ள ஜி.பி.எஸ்.ஐ வைத்து தங்கள் இருப்பிடத்தை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துவிடுவதாக கருதிய ஹெஸ்பொல்லா போராளிகள், பேஜரில் ஜி.பி.எஸ் வசதி இல்லாததால் பேஜரின் இருப்பிடத்தை ட்ராக் செய்ய முடியாது என்பதால், பேஜர் பாதுகாப்பானது என கருதி சில மாதங்களாக அவற்றை பயன்படுத்திவருவதாக கூறப்படுகிறது.

லெபனான் தலைநகரான பெய்ரூட்-இன் தெற்கு புறநகர் பகுதிகளில் ஹெஸ்பொல்லா இயக்கத்தினரிடம் இருந்த ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் செவ்வாய்க்கிழமை மதியம் மூன்று மணி அளவில் குறுகிய நேரத்தில், அடுத்தடுத்து வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில், முகம், கைவிரல்கள், இடுப்பில் ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதில், இரானுக்கான தூதர் உட்பட 4000 பேர் காயம் அடைந்ததாகவும், 11 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலால், கட்டடங்களுக்கு பெரிய சேதம் ஏற்பட்டதாகவோ அல்லது தீ விபத்து ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை.

வெடித்த பேஜர்களில் பெரும்பாலானவை AP924 ரக கருவிகள் என்றும், ஹெஸ்பொல்லா அமைப்பினரால் லெபனானுக்குள் கடத்திவரப்பட்டவை என்றும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த புதிய ரக பேஜர்களில் இருந்த லித்தியம் பேட்டரிகளை சூடேற்றி வெடிக்கச் செய்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பேட்டரிகளை அதிக வெப்பமடையச் செய்வதால், இந்த வெடிப்புச்சம்பவம் நிகழ்ந்திருக்காது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 50% சார்ஜ்க்கு கீழ் உள்ள லித்தியம் பேட்டரிகள் வாயுக்கள், நீராவியை உருவாக்கும் என்பதால், அவை வெடிக்க வாய்ப்பு இல்லை என்றும் முழுமையாக சார்ஜ் ஆன பேட்டரிகள் மட்டுமே வெடிக்க வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். வெடித்துச் சிதறிய பேஜர் கருவிகள் அனைத்தும் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கருதப்படுகிறது.

மேலும் ஹெஸ்பொல்லா அமைப்பினர் தைவான் நிறுவனத்திடம் வாங்கிய சுமார் 5000 பேஜர்களுக்குள், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு சிறிய அளவிலான டெட்டனேட்டர்களை பேட்டரியை ஒட்டி உள்ளீடு செய்திருக்கலாம் எனவும் அதிப்படியான ஆல்பா நியூமரிக் ரேடியோ அலைகளை அனுப்பி வெடிக்கச்செய்திருக்கலாம் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெவ்வேறு டவர்கள் மூலம் செல்போன்கள் செயல்படுவதைப்போல் அன்றி, பேஜர் கருவிகள் ஒரே கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் இயக்கப்படுவதாகவும், அதனால், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்காக பேஜர் கருவிகளுக்கு செய்தி அனுப்பும் வசதி உள்ளது. இதை பயன்படுத்தி, ஒரே நேரத்தில் ஆக்டிவேட் செய்யப்பட்டு டெட்டனேட்டர்களை வெடிக்கச் செய்திருக்கலாம் எனவும் நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களின் உதவியுடன், பல மாதங்களாக திட்டமிட்டு, இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த புதிய தொழிற்நுட்ப தாக்குதல் லெபனானை மட்டுமல்ல உலக நாடுகளையே அதிரச் செய்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments