கார் சாவியை பறித்து பறந்த கே.டி.எம் பைக்கர்ஸ் விரட்டி பிடித்த பொதுமக்கள்..! கொல்லிமலை ட்ரிப் வேதனைகள்
சின்னசேலம் அருகே காரில் மோதி விபத்தை ஏற்படுத்தியதொடு, மருத்துவமனைக்கு அவசரமாக சென்றவர்களின் கார் சாவியை பறித்து தகராறில் ஈடுபட்ட பைக்கர்ஸ்களை, கொத்தாக மடக்கிப் பிடித்த கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கல்லானத்தம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் மின்சாரம் தாக்கி உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் குடும்பத்தினர் மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர்.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அம்மையகரம் பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் ஒருவழிச் சாலையில் கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, காருக்கு பின்னால் கேடிஎம் உள்ளிட்ட விலை உயர்ந்த பைக்குகளில், மின்னல் வேகத்தில் வந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவர் வந்த பைக் கார் மீது மோதியது.
விபத்தை ஏற்படுத்தி விட்டோம் என்ற அச்ச உணர்வு கொஞ்சம் கூட இல்லாத அந்த பைக் இளைஞர்கள், திடீரென பைக்குகளை மறித்து நிறுத்தி, காரை ஓட்டிச்சென்ற ராஜேஷிடம் தகராறில் ஈடுபட்டு, அவரது கார் சாவியை பிடுங்கிக் கொண்டு, அவரை திட்டியதோடு 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடு என்றும் மிரட்டி, ஆபாசமாக திட்டி வாக்குவாதத்தில் ஈடு பட்டதாக கூறப்படுகின்றது.
இதனைக் கண்ட அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் என்னடா அநியாயம் இது. நீங்கள் தவறு செய்துவிட்டு மருத்துவமனைக்கு செல்பவர்களை இப்படி மிரட்டுகிறீர்களே ? எனத் தட்டி கேட்டதோடு, செல்போனில் வீடியோ எடுத்தனர்.
இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர்கள், அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதற்கிடையே முன்கூட்டியே , பைக்கற்களின் அடாவடி குறித்து ராஜேஷ் தங்கள் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சரியான நேரத்தில் பைக்குகளில் வந்த அவர்கள் , வம்பு செய்து விட்டு கார் சாவியுடன் தப்பிச் சென்ற ஒரு பெண் உள்பட அந்த 14 இளைஞர்களையும் தச்சூர் அருகே கொத்தாக மடக்கி பிடித்தனர்.
படித்த இளைஞர்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். நாகரீகமாக பேச வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்ததோடு கள்ளக்குறிச்சி போலீசாரை வரவழைத்து, அவர்களிடம் 14 பேரையும் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், காரில் மோதி லேசான விபத்தை ஏற்படுத்திய பைக்கையும், கொலை மிரட்டல் விடுத்த மற்றொரு இளைஞரின் பைக்கையும் போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
காவல் நிலையம் சென்றதும் அந்த இளைஞர்கள் மீண்டும் தங்கள் மீது தவறில்லை. எங்கள் நண்பர்களை விடுங்கள் என, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை மடக்கிப் பிடித்தவர்களும், பைக்கர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் எனத் தெரிவித்ததால் தவித்து போன
போலீசார் அவர்களை வீடியோ எடுத்தபடி உங்கள் மீதும் வழக்குப் போடுவோம், இருதரப்பு மீதும் வழக்குப் போட வேண்டுமா ? என எச்சரித்ததால், அவர்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, போலீசாரிடம் பிடிபட்ட இரண்டு பைக் இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும், நண்பர்களுடன் பைக்கில் கொல்லிமலைக்கு ட்ரிப் சென்று விட்டு திரும்பி வந்ததாகவும், வரும் வழியில் இதுபோன்ற சம்பவம் நடந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
Comments