திருவண்ணாமலையில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த 2 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை விற்பனை செய்ததாக அருண் என்பவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவலின் அடிப்படையில், வந்தவாசி பொட்டி நாயுடு தெருவைச் சேர்ந்த அருண் என்பவரை போலீசார் கண்காணித்தனர். பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இரண்டு வீடுகள் கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்வது தெரியவந்தது.
மக்களை நம்பவைக்க சாந்தி அகர்பத்தி என்ற பெயரில் ஊதுபத்தி கம்பெனியும் நடத்திவந்துள்ளார். விசாரணையில், அவர் மீது நான்கு வழக்குகள் இருந்தது தெரிந்து, அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 செல்போன்கள், ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டன.
வந்தவாசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், ஏஜென்டுகள் மூலம் 40 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்ததும், வாட்ஸ்-அப் மூலம் ரிசல்ட்ஸ் அனுப்பி வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார், 48 லட்சம் ரூபாய் ரொக்கம், 82 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்தனர். அவருடன் சேர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக சையத் இப்ராஹிம் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
Comments