உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்.. ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்க அரசு நடவடிக்கை..!
உத்தரகாண்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக இருப்பதாகவும், வானிலை ஒத்துழைத்தால் ஹெலிகாப்டர் மூலம் இன்றே மீட்கப்படுவார்கள் என்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்திலிருந்து கடந்த 1ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ்க்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 30 பேர் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று திரும்பியபோது வழியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதியில் சிக்கிக்கொண்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அருகில் இருந்த யாத்ரீகர் தங்குமிடத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர்களை நேற்று மாலைக்குப் பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உறவினர்கள் கூறினர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அம்மாநில அரசுடன் பேசி விரைவில் அவர்களை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Comments