ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு... திருமா எக்ஸ் தளத்தில் வீடியோ அடுத்தடுத்து டெலிட்.. 2 அட்மின்களில் சிக்கப்போவது யார்?

0 1319

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வி.சி.க கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் பேசியிருந்த வீடியோக்கள் அவரது எக்ஸ் தளத்தில் 2 முறை பகிரப்பட்டு சில நிமிடங்களில் நீக்கப்பட்டன.

அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனது அட்மினைத்தான் கேட்கவேண்டும் எனவும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த வியாழன்று நடந்த விசிக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்பதுதான் 1999-ல் தேர்தல் அரசியலில் விசிக அடியெடுத்து வைத்தபோது முன்வைத்த முழக்கம் என குறிப்பிட்டு பேசியிருந்தார்.

அவரது பேச்சை உடனே எக்ஸ் தளத்தில் பதிவேற்றாமல், சனிக்கிழமை காலை திடீரென 2 முறை பதிவேற்றம் செய்யப்பட்டு சில நிமிடங்களில் டெலிட்டும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மதுரை சென்ற திருமாவளவனிடம் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், எப்போதும் நின்று நிதானமாக பேசும் திருமாவளன், இந்த முறை நின்று நிதானமாக பேட்டியளிக்கவில்லை.

ஆனால், சர்ச்சை பெரிதாக வெடித்த நிலையில், மீண்டும் மதுரை அவனியாபுரத்தில் நின்று நிதானமாக பேட்டியளித்த திருமாவளவன், தான் டெல்லியிலிருந்து வந்ததால் நடந்தது எதுவும் தெரியாது என்று கூறினார்.

2 அட்மின்களில் பவர் ஷேர் குறித்த வீடியோவை பகிர்ந்தது யாரென்று தெரியவில்லை என சமாளித்த திருமாவளவன், 2021-ல் அதிகாரத்தில் பங்கு கேட்டிருக்கலாம், இல்லையென்றால் 2026-ல் தான் கேட்க முடியும் என அடுத்த டார்கெட் குறித்து விளக்கினார்

திருமாவளவனின் வழக்கமான பேச்சு இப்போது கவனம் பெற, தி.மு.க கூட்டணியில் இருக்கும் வி.சி.க நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுக, த.வெ.க உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்ததுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

தங்களது மாநாடு 100% மது ஒழிப்புக்கான அரசியலை மட்டும் முன்னிறுத்தி நடத்துவதாகவும், இதில் 0.1% கூட தேர்தல் கூட்டணி கணக்கு கிடையாது என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments