செயற்கைக்கோள் மூலம் பயண தூரம் கணக்கிடப்பட்டு சுங்கக் கட்டணம்... தேசிய நெடுஞ்சாலைகளில் 20 கி.மீ கட்டணமின்றி பயணிக்கலாம் மத்திய அரசு
செயற்கைக்கோள் மூலம் பயண தூரம் கணக்கிடப்பட்டு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் என்ற முறையில் கட்டணம் வசூலிக்கும் வகையில், ஆன்-போர்ட் யூனிட் எனப்படும் ஓ.பி.யு கருவி வாகனங்களில் வெளிப்புறத்தில் பொருத்தப்படும்.
இந்தக் கருவி பொருத்தப்பட்ட வாகனம், சுங்கச்சாவடியைக் கடக்கும்போது, முதல் 20 கிலோமீட்டருக்குப் பின் அந்த வாகனம் பயணிக்கும் தூரத்தை செயற்கைக்கோள் வழியாகக் கணக்கிட்டு கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
அதாவது, ஓ.பி.யு கருவி மூலம் வாகனத்தை பின்தொடரும் செயற்கைக்கோள் இணைப்பு, குறிப்பிட்ட தொலைவுகளில் பொருத்தப்பட உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளுடன் ஒருங்கிணைத்து கட்டணம் கணக்கிடப்படும்.
முதல்கட்டமாக, அதிவிரைவுச் சாலைகள், முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளதாகவும், பெரும்பாலான வாகனங்களில் ஓ.பி.யு கருவி பொருத்தப்பட்ட பிறகு, சுங்கச்சாவடிகள் படிப்படியாக அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆன்-போர்டு யூனிட்டுகளை, அரசு இணைய தளங்களில் வாங்கிக்கொள்ளலாம். இனி புதிதாக விற்பனைக்கு வரும் வாகனங்களில், இந்த ஆன்-போர்டு கருவியை தயாரிப்பு நிறுவனங்களே பொருத்தி விற்பனை செய்யும் எனக் கூறப்படுகிறது.
இந்தப் புதிய முறையில், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள், தினமும் 20 கிலோ மீட்டர் வரை கட்டணமின்றி செல்ல முடிவதுடன், சுங்கச்சாவடியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களும் பயன்பெற முடியும்.
Comments