பெண் டி.ஐ.ஜியின் வீட்டில் வேலைக்கு ஆயுள் சிறைக்கைதி இருட்டு அறையில் சித்ரவதை..! விசாரணை படத்தை மிஞ்சும் கொடுமை

0 1401

சிறைத்துறை டிஐஜியின் வீட்டு வேலைக்கு ஆயுள் தண்டனை கைதியை அழைத்துச்சென்ற போது, வீட்டில் இருந்து நகை பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டி 14 நாட்கள் இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக டி.ஐ.ஜி ராஜலெட்சுமி, உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவக்குமார், வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக இருந்தார். இவரது தாய் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ஆயுள் கைதியான தனது மகனை சட்ட விரோதமாக சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜெலட்சுமியின் வீட்டு வேலைக்கு பணியமர்த்தியதாகவும், அங்கு நகைப்பணம் காணாமல் போன நிலையில் அதனை தனது மகன் எடுத்ததாக கூறி தனியாக இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறி இருந்தார்.இதையடுத்து இந்த புகார் குறித்து வேலூர் சிறைத்துறை நடுவர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீத்த்துறை நடுவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சிபிசிஐடி எஸ்.பி வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் சிறை அதிகாரிகளின் அத்துமீறல் குறித்து விரிவான விசாரணையை முன்னெடுத்தனர்.

முன்னதாக பாதுகாப்பு கருதி வேலூரில் இருந்த சிவக்குமார் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார், அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். தனக்கு நேர்ந்த கொடுமைகள், சித்ரவதைகள் குறித்து சிவக்குமார் விரிவான வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில்
வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் சிறை கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெய்லர் அருள்குமரன், சிறை தனி பாதுகாப்பு அதிகாரி அருள்குமரன், டிஐஜி ராஜலட்சுமியின் PSO ராஜு, சிறை காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி, செல்வி சிறை வார்டன்களான சுரேஷ், சேது ஆகிய உட்பட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை சிவக்குமாருக்கு இந்த கொடுமை நடந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை டிஐஜி வீட்டில் ஆயுள் கைதி சிவக்குமார் பணியாமர்த்தப்பட்ட நிலையில் அவரது வீட்டில் ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான நகை பணம் திருடு போனதாகவும், அதனை சிவக்குமார் திருடி இருப்பார் என்று டி.ஐ.ஜி ராஜலெட்சுமி கூறியதன் அடிப்படையில், சிறைத்துறை கூடுதல் எஸ்பி, ஜெயிலர் மற்றும் சிறைத்துறையினர் கொடுமை செய்ததாக கூறப்பட்டுளது.

சிறையில் உள்ள எந்த கைதியும் வெளியில் பணிக்காக பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறி டி.ஐ.ஜி வீட்டில் அடிமை போல் கைதிகள் பணிக்கு அமர்த்தப்பட்டது தெரியவந்துள்ளதாகவும், சிவக்குமார் மட்டுமல்லாது மற்ற கைதிகளும் பல வருடங்களாக விதிகளை மீறி உயரதிகாரிகள் வீட்டில் பணிக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

வேலூர் மத்திய சிறையிலும் , டி.ஐ.ஜி பங்களாவிலும் ஆய்வு செய்ததில் திருட்டு சம்பவம் நடந்தது தொடர்பாகவும் அது தொடர்பாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் 84 நாட்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதும் 14 நாட்கள் மூடப்பட்ட இருட்டு அறையில் அடைக்கப்பட்டு மிகக்கொடுமையாக தாக்கப்பட்டுள்ளதும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments