குமட்டிக் கொண்டு வரும் துர்நாற்றம்.. ரயிலில் வந்திறங்கிய இறைச்சி அந்த இறைச்சி தான் உங்களுக்கா.. அசைவ பிரியர்களின் தொடரும் பரிதாபம்

0 1192

புழுக்கள் நெளிந்து, துர்நாற்றத்துடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயிலில் வந்து இறக்கப்பட்டிருந்த 1500 கிலோ கெட்டுப்போன இறைச்சியை கைப்பற்றச் சென்ற அதிகாரிகளே வாந்தி எடுக்கும் நிலைக்குச் சென்றனர்.

கெட்டுப்போன இறைச்சி ரயிலில் வந்திருப்பதாக கிடைத்த தகவலால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஆய்வுக்குச் சென்ற உணவு பாதுகாப்புத் துறையினர் மூக்கை பொத்திக் கொண்டு ஓடும் காட்சிகள் தான் இவை...

டெல்லியிருந்து சென்னைக்கு கடந்த சனிக்கிழமை வந்தடைந்தது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில். சரக்கு பெட்டகத்திலிருந்து கீழே இறக்கி வைக்கப்பட்டிருந்த பார்சல் பெட்டிகளில் இருந்து ரத்தத்தோடு சேர்ந்து தண்ணீர் வடிந்து துர்நாற்றமும் வீசிக் கொண்டிருந்தது.

பெட்டியின் அருகே புழுக்களும் நெளியவே இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் அங்குச் சென்று ஆய்வு நடத்தினர். அங்கு கெட்டுப்போன ஆட்டிறைச்சி, ஆட்டுக்கால், பேக் செய்யப்பட்ட கோழி கபாப் இறைச்சி, காளான் என பல ஐயிட்டங்களை பறிமுதல் செய்தனர்.

அழுகி துர்நாற்றம் வீசியதால் அங்கிருந்த 1,500 கிலோ எடை கொண்ட அந்த இறைச்சியை மொத்தமாக கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர் உணவு பாதுகாப்புத் துறையினர்.

மைனஸ் 18 டிகிரியில் அட்டைப் பெட்டியில் வைத்து தான் இறைச்சியை அனுப்பி வைக்க வேண்டுமென விதி உள்ளதாகவும், எந்த விதியும் கடைபிடிக்காமல் இறைச்சி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர் உணவு பாதுகாப்புத் துறையினர்.

கடந்த வாரம் டெல்லியிலிருந்து புறப்பட்ட ரயில் ஆந்திராவில் பெய்த கனமழையால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு 4 நாள் தாமதமாக சென்னைக்கு வந்தடைந்ததாக கூறப்படுகிறது. ரயில் பெட்டியை தனியார் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து சரக்குகளை அனுப்புவதால் அனுப்புகிறவர் விபரம், யாருக்காக வருகிறது என்ற முழு விபரமும் உடனடியாக கிடைக்கவில்லை என தெரிவித்தனர் ரயில்வே போலீஸார்.

சரக்குகள் முழுமையான பாதுகாப்போடு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டுமென ரயில்வே துறைக்கு வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி.

அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சிலர் வெளிமாநிலங்களிலிருந்து எந்தவிதமான பாதுகாப்பு விதிகளையும் கடைபிடிக்காமல் இறைச்சியை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அந்த இறைச்சி கெட்டுப்போன நிலையிலேயே நட்சத்திர ஹோட்டல்கள் முதல் கையேந்தி பவன் வரையிலும் விநியோகிக்கப்பட்டு மக்களுக்கு உணவாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர் போலீஸார்.

கெட்டுப்போன இறைச்சி, பூஞ்சை பிடித்த ஆட்டுக்கால் வரிசையில் தற்போது புழு பிடித்த இறைச்சியும் அசைவ உணவு பிரியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments