400 லிட்டர் டீசல் போச்சாம்... முழிச்சு பார்த்தா காணோம்... சாலையில் தவித்த லாரி ஓட்டுனர்...! திருச்சி போலீசுக்கு சவால்..!

0 921

தூத்துக்குடியில் இருந்து கடலூருக்கு ஆசிட் ஏற்றிசென்ற லாரி ஓட்டுனர் கண் அயர்ந்த நேரம் பார்த்து, லாரியில் இருந்த 400 லிட்டர் டீசலை மர்ம ஆசாமிகள் களவாடிச் சென்றதால் லாரியை எடுத்துச்செல்ல இயலாமல் 2 நாட்களாக லாரி ஓட்டுனர் தவித்து வருகின்றார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகில் உள்ள டி.சி.டபிள்யு தொழிற்சாலையில் இருந்து கடந்த 6 ஆம் தேதி ஆசிட் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று கடலூர் நோக்கிச்சென்று கொண்டிருந்தது.

நள்ளிரவு 12 மணி அளவில் லாரி திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே வந்த போது ஓட்டுனருக்கு தூக்கம் வந்ததால், அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் லாரியை நிறுத்திவிட்டு கண் அயர்ந்து தூங்கி உள்ளார்.

2 மணி நேரம் கழித்து தூங்கி எழுந்த ஓட்டுனர், லாரியை சுற்றி பார்த்த போது டீசல் டேங்க் பூட்டு உடைக்கப்பட்டு மொத்த டீசலையும் யாரோ மர்ம ஆசாமிகள் குழாய் போட்டு உறிஞ்சி சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது போலீசார் புகாரை வாங்க மறுத்து அவரை அலைக் கழித்ததால், லாரியை எடுத்துச்செல்ல இயலாமல் சாலையிலேயே தவிப்பதாக லாரி ஓட்டுனர் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுனர் இ.வாகன் சேவை மையத்தை தொடர்பு கொண்டதை அடுத்து இந்த டீசல் திருட்டு குறித்தும் போலீசார் புகாரை வாங்க மறுத்தது குறித்தும் ஆன் லைன் மூலம் திருச்சி எஸ்.பி. வருண் குமாருக்கு புகார் அளித்துள்ளனர்.

அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சியில் இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் டீசலை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருப்பதாகவும், அதனை வைத்து டீசல் திருடர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல், தங்கள் லிமிட்டில் எப்படி லாரியை நிறுத்தி தூங்கலாம் என்று போலீசார் மிரட்டி விரட்டுவதாகவும் லாரி ஓட்டுனர் வேதனை தெரிவித்தார்.

இந்த பகுதியில் ஏற்கனவே சில லாரிகளில் டீசல் திருட்டு நடந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில் இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments