வீட்டில் தனியாக இருக்கும் இல்லத்தரசிகளே உஷார்..!..திருட்டு பாட்டி பராக்..! - மக்களிடம் வசமாய் சிக்கியது எப்படி..?

0 1138

சென்னை மாங்காட்டில் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு முகவரி கேட்பது போல சென்று பட்டபகலில் நகை பணம் திருடிவிட்டு தப்பமுயன்ற மூதாட்டியை விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பைபிளுக்குள் குறிப்பு வைத்துக் கொண்டு  கைவரிசை காட்டிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

சென்னை மாங்காடு வெள்ளீஸ்வரன் நகர் பகுதியில் காலை 9 மணி அளவில் கையில் பைபிள் வைத்திருந்த மூதாட்டி ஒருவர், பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளாக நோட்டமிட்டபடி செல்வதும், வீட்டுக்குள் நுழைவதை வீட்டில் இருக்கும் பெண்கள் பார்த்து விட்டால், இது டீச்சர் வீடுதானே என்று முகவரி தான் மாறி வந்து விட்டது போல கூறிவிட்டு வெளியே செல்வதுமாக இருந்துள்ளார்.

மாடியில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்து அந்த வீட்டின் பீரோவில் இருந்ததங்க நெக்லஸ் வைக்கப்பட்டிருந்த பாக்சை திருடி புடவைக்குள் மறைத்தபடி தப்பிக்க முயன்றார். அப்போது அந்த வீட்டிற்குள் இருந்த பெண் பார்த்து கூச்சலிட்ட நிலையில் மாடியில் இருந்து படிகள் வழியாக எகிறி குதித்து தப்பிக்க முயன்ற மூதாட்டியை விரட்டிப்பிடித்தனர்.

விசாரித்த போது அந்த பெண்ணின் கையில் வைத்திருந்த பைபிளுக்குள் அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் எண்களும், அந்த வீடுகளுக்குள் எங்கு பீரோ உள்ளது என்ற குறிப்புகளும் துண்டுச்சீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

வீடுபுகுந்து திருடிய பாட்டியை சுற்றிவளைத்து குடியிருப்பு வாசிகள் சோதனை செய்த போது வந்த ஒரு பெண் ஆத்திரம் தாங்காமல் அவரை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, உடனடியாக பாட்டி மயக்கம் வந்தது போல படுத்துக் கொண்டார்.

சாலையில் விழுந்து பாட்டி ஆக்டிங் கொடுத்த போது அந்த பாட்டியின் ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்த சில்லறை காசுகள் வெளியே கொட்டியது, இது எங்கிருந்து எடுத்தது என்று விசாரித்த போது அருகில் உள்ள மற்றொரு வீட்டின் பீரோவில் இருந்த உண்டியலை எடுத்தது தெரியவந்தது.

உண்டியலை கையில் வைத்திருந்தால் சிக்கிக் கொள்வோம் என்று அந்த திருட்டு பாட்டி பணத்தையும் சில்லரைகாசுகளையும் ஜாக்கெட்டிற்குள் மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்த அந்த வீட்டு பெண் தனது உண்டியல் பணத்தை பாட்டியிடம் இருந்து கைப்பற்றினார்.

தொடர்ந்து அந்த பெண்ணை ஆட்டோவில் வந்த மர்ம ஆசாமி இறக்கி விட்டுச்சென்றதாக தெரிவித்த அந்தப்பகுதி மக்கள், ஒவ்வொரு வீட்டையும் நோட்டமிட்டு தெளிவாக குறித்துக் கொடுத்து திருட்டு பாட்டியை அனுப்பி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

திருட்டு பாட்டியை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவரது பின்னணியில் இருக்கும் கும்பல் யார் என்று போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments