கோவிலுக்கு வரும் பெண்களிடம் கொத்து கொத்தாய் பறித்த நகைகள் கார் வாங்கிய திருட்டு தம்பதி..! சென்னையில் இருந்து நீண்ட கரங்கள்

0 1463

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 5 பெண்கள் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறித்த கேடி தம்பதியை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர். கோவிலுக்கு வரும் பெண்களின் கழுத்தில் கைவைத்து சொந்தமாக கார் வாங்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் கடந்த மாதம் 7 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். 1600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஐந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.

மொத்தம் 18 சவரன் தங்க நகைகள் பறிக்கப்பட்டதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப் படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுற்றுவட்டார பகுதிகளில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை சேகரித்து சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து சென்ற இளம் தம்பதியரை தேடி வந்த நிலையில் அவர்கள் தாம்பரம் மணிமங்கலத்தை சேர்ந்த காதல் தம்பதியரான அஜித் - அனு என்பது தெரியவந்தது

இருவரையும் பிடித்து விசாரித்ததில் கோவில் விழாக்களில் பெண்கள் கழுத்து நிறைய நகைகள் அணிந்து வருவதால் அதனை குறிவைத்து ஐந்து பெண்களிடம் நகைகளை கொள்ளை அடித்ததாக ஒப்புக்கொண்டனர். தாங்கள் இருவரும் ஜோடியாய் நல்ல உடை அணிந்தபடி கூட்டத்திற்குள் சென்றதால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை என்று தெரிவித்த அந்த தம்பதி, கடந்த மாதம் 23 தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கும்பாபிஷேகத்தில் ஆறு பெண்களிடம் நகைகளை பறித்ததாகவும் , அவற்றை விற்று சொந்தமாக கேரளா மாநிலம் பதிவு எண் கொண்ட கியா காரை வாங்கியதாகவும் தெரிவித்தனர்.

கொள்ளைக்கார தம்பதியரிடம் இருந்த 18 சவரன் தங்க நகைகளையும், கருப்பு நிற சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த இளம் திருட்டு தம்பதி மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் தர்மபுரி,சென்னை, தாழம்பூர்,கேளம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் திருவிழாவுக்கு செல்லும் பெண்கள் முன் எச்சரிக்கையுடன், தங்கள் நகைகளை சேப்டி பின் மூலம் ஆடையுடன் இணைத்து வைத்துக் கொண்டால் யாராவது திருட முயன்றால் கண்டு கொள்ளலாம் என்று போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments