உரிமையாளர் வீட்டையே லீசுக்கு விட்ட பெண்.. ஃபேஸ்புக்கில் அழுகாச்சி நாடகம்..!
சென்னையில் வீட்டு உரிமையாளர் தன்னையும் தனது குழந்தைகளையும் தாக்கி வெளியேற்றிவிட்டதாக ஃபேஸ்புக் நேரலை செய்து அழுது புலம்பிய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டு உரிமையாளர் வெளியூர் சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டையே 6 லட்ச ரூபாய்க்கு குத்தகைக்கு விட்ட பெண்ணின் தில்லாலங்கடி வேலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தன்னையும் தனது குழந்தைகளையும் வீட்டு உரிமையாளர் பழனி தனது வழக்கறிஞர்களோடு சேர்ந்து தாக்கி விரட்டிவிட்டார் என ஃபேஸ்புக் நேரலையில் அழுது புலம்பி, பலரது பரிதாபங்களை சம்பாதித்த லோகநாயகி இவர்தான்.
இந்த வீடியோவில் சிலர் தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்யவே, உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார், வீடியோ பதிவு செய்த இடம், சென்னை விருகம்பாக்கம் ஆழ்வார்திருநகர் இந்திரா நகர் 4-வது தெரு என்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து விருகம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் லோகநாயகி என்பதும் அவர் கூறியதுபோல், அவரது குழந்தையை யாரும் தாக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
பழனி என்பவரது வீட்டில் தான் லோகநாயகி தனது 2 மகள்களுடன் வாடகைக்கு இருந்து வருகிறார். 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரைப் பிரிந்த லோகநாயகி, பழனியுடன் ஏற்பட்ட தவறான தொடர்பால், அவர் வீட்டிலேயே வாடகைக்குக் குடிவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெங்களூருவில் வசிக்கும் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்று, பழனி தனது குடும்பத்துடன் பெங்களூரு சென்றுள்ளார். 6 மாதங்கள் கழித்து வந்து பார்த்தபோது, அவரது வீட்டை லோகநாயகி 6 லட்ச ரூபாய்க்கு வேறொருவருக்கு குத்தகைக்கு விட்டது தெரியவந்தது. இதனால் ஆத்திமடைந்த பழனி, உடனடியாக வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் லோகநாயகி, தனது வளர்ப்பு நாயை ஏவிவிட்டு, பழனியை கடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், விருகம்பாக்கம் போலீசில் புகாரளித்துள்ளார். அதுகுறித்த விசாரணை தொடங்குவதற்குள்தான், லோகநாயகி, ஃபேஸ்புக்கில் இந்த அழுகாச்சி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது, 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments