மாணவர்கள் விடுதிகளில் 1000 போலீசார் ரெய்டு - போதை சாக்லேட்டுகள், கஞ்சா பறிமுதல்
செங்கல்பட்டு அருகே மாணவர்கள் தங்கிய வீடுகளில், பண்டல் பண்டலாக போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், போதைப்பொருள் கும்பலின் தொடர்புகள் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பொத்தேரி பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 29 மற்றும் 30ம் தேதிகளில் நடத்திய சோதனையில், காரின் பின் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது.
கைதான நபர்கள் போதைபொருட்களை தென்மாவட்டங்களுக்கு கொண்டு சென்று, படகுகளில் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தாம்பரம் காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த 1,000 போலீசார் பொத்தேரி பகுதியில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருக்கும் 500க்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினர்.
இதில் போதை சாக்லேட்டுகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 19 மாணவர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கும்பல் குறித்து வருவாய் புலனாய்வுத் துறையினரும், சென்னை மற்றும் தாம்பரம் போலீசாரும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
Comments