காதல் காத்த கருப்பசாமி..!
ஒரு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்திவந்த காதல் ஜோடியை கட்டாயப்படுத்தி காரில் கடத்திச்சென்ற 5 பேரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். தக்க தருணத்தில் வந்து காதல் ஜோடியின் உயிரை காத்த கருப்பசாமி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிருஷ்ணவேணி இவர் கல்லூரி மாணவர் பழனிச்சாமியை காதலித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு தாயில் பட்டியில் குடித்தனம் நடத்தி வந்தனர். வெள்ளிக்கிழமை காலை பெண்ணின் பெற்றோரான ஜெயக்குமார்-அய்யம்மாள் உள்ளிட்ட ஐந்து பேர் தாயில்பட்டிக்குச் சென்று சொந்த பந்தங்கள் கூடி பெரிய அளவில் கிராண்டாக திருமணம் செய்து வைகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளனர். வரமறுக்கவே இருவரையும் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி அழைத்துச்சென்றதாக கூறப்படுகின்றது.
இதனை பார்த்து அப்பகுதி மக்கள் வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், போலீசார் அந்த காரை சினிமா பாணியில் விரட்டி சென்றுள்ளனர். காதல்ஜோடி கடத்தல் குறித்து தென்காசி மாவட்ட காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறையிலிருந்தும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் , திருவேங்கடம் மற்றும் குருவிகுளம் காவல்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
வழியில் போலீசார் வாகன சோதனை நடத்துவதை பார்த்ததும் முன் கூட்டியே காரை நிறுத்திய பெண் வீட்டார், காருக்குள் வைத்தே காதல் தம்பதியான கிருஷ்ணவேணியையும் பழனிச்சாமியையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகின்றது. இதனை அந்தவழியாக வந்த பெரியவர் கருப்பசாமி என்பவர் பார்த்து சத்தம் போட்டபடி, காருக்குள் இருந்து புதுமண தம்பதியை பத்திரமாக மீட்டு தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து காரை கிளப்பிக் கொண்டு தப்பிச்சென்றவர்களை குருவிகுளம் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் விரட்டிச்சென்று பிடித்து வெம்பகோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட புதுமண ஜோடிகளையும் பெரியவர் குருவிக்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காதல் திருமணம் செய்த ஜோடிகளை தக்க சமயத்தில் வந்து பத்திரமாக மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்த பெரியவர் கருப்பசாமியை காவல்துறையினர் பாராட்டினர்.
Comments