பருப்பு வடை தெரியும் அது என்ன எலி வடை..?.. இழுத்து பூட்டப்பட்ட கடை..! - இப்படில்லாம் வியாபாரம் செய்தால் எப்படி..?
குளித்தலையில் உள்ள டீக்கடை ஒன்றில் வாங்கிய பருப்பு வடையில் செத்துபோன சுண்டெலி இருந்ததால் அதனை சாப்பிட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடைகளை அப்புறப்படுத்த மறுத்ததால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் அருகே திருச்சி கரூர் நெடுஞ்சாலை வைகைநல்லூர் அக்ரஹாரம் பிரிவு சாலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காளிதாசன் என்பவர், பாபு என்ற பெயரில் டீ மற்றும் பலகார கடை நடத்தி வந்தார். இங்கு கார்த்தி என்ற எலக்ட்ரீசியன் காலை 12 மணி அளவில் ஒரு போண்டா, ஒரு பருப்பு வடை வாங்கி சாப்பிட்டு உள்ளார் . அதில் பருப்பு வடை பாதி சாப்பிட்டு விட்டு பார்க்கையில் உள்ளே சுண்டெலி ஒன்று செத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
இதுகுறித்து கடை உரிமையாளர் பாபுவிடம் கேட்டபோது அது ஒன்றும் செய்யாது சிறிய எலிதான் தூக்கி போட்டு விடுங்கள் என்று கூலாக கூறியுள்ளார். எலி விழுந்த மாவில் தாயாரிக்கப்பட்ட வடைகளை தூக்கிப்போட சொல்லியும் கேட்காமல், அலட்சியத்துடன் பொதுமக்களுக்கு பலகாரங்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதோடு, நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். குளித்தலை பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் யாரும் இல்லாததால், நகராட்சி நிர்வாகம் சார்பில் கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு அலுவலர் வந்தவுடன் கடை மற்றும் தின்பண்டங்கள் சோதனைக்காக எடுத்துச்சென்ற தோடு, கடையையும் இழுத்துப்பூட்டி சீல்வைத்தனர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்
பாதிக்கப்பட்ட கார்த்திக் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Comments